எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்கு தானே இந்த பொழைப்பு…? தலைமுறையும் நிலைத்து நிற்க இதைச் செய்தால் போதும்…!

By Sankar Velu

Published:

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு சொலவடை உண்டு. வேலைக்கே போகாமல் சோம்பேறியாக இருப்பவர்கள் சோற்றுக்காக கோவில் கோவிலாக அலைவார்கள். கல்யாண வீடுகளுக்கும் செல்வார்கள். எங்கு சோறு போட்டாலும் அங்கு அடிமையாக இருப்பார்கள். இவர்களை கிண்டலாகச் சொல்வார்கள். அதற்குத் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அதன் பொருள் அதுவல்ல. ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கும். அதைக் காண்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவர்.

அவர்களுக்கு ஏழேழு பிறவிகளிலும் உணவுக்குப் பஞ்சமில்லை. சொர்க்கத்திற்குச் செல்வான் என்றும் சொல்வார்கள். இதுதான் அந்த சொலவடையின் உண்மையான பொருள். இப்போது அந்த சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் வரும் செவ்வாய்க்கிழமை (08.11.2022) வருகிறது. காணத்தவறாதீர்கள். இந்த அன்னாபிஷேகம் எதற்காக செய்யப்படுகிறது? பார்ப்பதால் என்னென்ன பலன்கள் என்றும் பார்க்கலாம்.

அன்னதோஷம், அன்னதுவேஷம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவ தரிசனம் செய்வது நல்லது. இதனால் அன்னதோஷம் நீங்கும். அது மட்டுமல்லாமல் உணவின் மீது வெறுப்பு வரச் செய்யும் நோய் அன்னதுவேஷம்.

இதுவும் நீங்கும். அன்னதுவேஷத்தினால் பாதிக்கப்பட்டு சாப்பிட உணவு இல்லாமல் சிரமப்படுவர். இவர்கள் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி தினத்தில் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை தரிசனம் செய்வது மிகுந்த நன்மையை உண்டாக்கும்.

அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. உணவு இருந்தாலும் ஒரு வாய் கூட ஒழுங்காக சாப்பிட முடியாது. தரித்திரம் ஆட்டிப்படைத்து விடும். இதற்கு என்னதான் வழி என்று கேட்கலாம். வழி தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் அன்னபூரணி விரதம் இருக்க வேண்டும். பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு தர வேண்டும்.

பௌர்ணமி நாளில் நாம் மறந்தும் கூட இந்தச் செயல்களைச் செய்துவிடக்கூடாது. அது என்னென்ன என்று பார்ப்போம்.

நமக்கெல்லாம் படியளக்கும் தெய்வம் தான் அன்னபூரணி. அவர் யார் என்றால் வேறு யாருமல்ல. பார்வதி தேவி தான். காரக கிரகமும் சந்திரன் தான். ஜோதிடத்திலும் இது சொல்லப்படுகிறது. அன்னம் என்ற உணவிற்கான காரக கிரகம் சந்திரன்.

Moon 1
Moon

அடிப்படை உணவிற்கு காரகர் யார் என்றால் அவர் சந்திரன். சுவையான உணவுக்கும் காரகர் சந்திரன் தான். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சந்திராஷ்டம நாள்களில் சாப்பிடாமல் வீணடிக்கக்கூடாது. ஆனால் பலர் வீணாக்குவர். இதைக் கண்டிப்பாக மறந்தும் கூட செய்து விடாதீர்கள்.

அதேபோல பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவம். பசியால் வாடும் பச்சிளம் குழந்தைகளுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காததும் பாவம். வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிட விடாமல் தடுப்பதும் பாவம். இவர்களைத் தான் அன்னதோஷம் பீடிக்கும். தான் சாப்பிட்டது போக நிறைய உணவு மீந்து போகும். அப்படிப்பட்ட உணவுகளை வீணாக்குவது மகாபாவம்.

அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் சிலர் போடுவார்கள். இது தான் பாவத்திலேயே பெரிய பாவம். இவர்களை அன்னதோஷம் பாதிக்கும். பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காமல் இருப்பவர்களையும், நம் முன்னோர்களான பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களையும் அன்னதோஷம் கட்டாயம் பிடிக்கும்.

Annapoorani
Annapoorani

பச்சரிசி வாங்கி கோவிலில் கொடுப்பது, குறைந்தபட்சம் 5 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம். அதேபோல தினமும் ஸ்ரீஅன்னபூரணியை வணங்கி வாருங்கள். உங்கள் வீட்டிலும் சரி. உங்கள் விசேஷங்களிலும் சரி. உணவு வீணாவது குறையும். அதேபோல அவரவர் கிராமத்தில் உள்ள தேவதைக்கு பொங்கல் வைத்து வழிபட்டாலும் உணவு வீணாகாது. இதற்காக ஸ்ரீரங்கநாதரையும் வணங்கலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் வரும் நவம்பர் 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஐப்பசி 22ல் வருகிறது. தமிழகத்தில் உள்ள சிறப்புமிக்க சிவாலயங்களில் இந்த அபிஷேகம் நடக்கும். முக்கியமாக திருவண்ணாமலை, தஞ்சாவூர் போன்ற முக்கிய ஸ்தலங்களில் இந்த விசேஷம் பிரம்மாண்டமாக நடக்கும். தஞ்சை பெருவுடையார் கோவிலில் 1000 டன் சாதத்தால் அலங்கரித்து அன்னாபிஷேகம் நடக்கும். அந்த உணவையே பிரசாதமாகவும் கொடுப்பார்கள்.

Annabishekam
Annabishekam

தாய்மார்கள் சமையல் அறையில் உணவு சமைக்கும்போது அரிசியைக் களைவார்கள். அப்போது தவறிக்கூட அரிசி தண்ணீரில் கலந்து வீணாகக் கொட்டிவிடக்கூடாது.

அந்த அரிசியைக் கவனமாகக் கழுவி சமைக்க வேண்டும். அதே போல சமைத்த உணவுகளை ஒருபோதும் வீணாகக் கீழே கொட்டக்கூடாது. சாப்பாடு நல்லா இல்லை என்றாலும் கொட்டிவிடக்கூடாது.

மீதமுள்ள உணவுகளை பறவைகள், விலங்குகளுக்குக் கொடுக்கலாம். முக்கியமாக பௌர்ணமி நாளிலாவது இந்த முறையைக் கடைபிடியுங்கள். இது உங்கள் தலைமுறையைத் தெம்பாக நிலைத்து நிற்கச் செய்யும். ஆம்…இப்படிச் செய்தால் ஏழேழு தலைமுறைக்கும் உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து விடும்.

 

Leave a Comment