அட்சய திருதியைன்னாலே தங்கம் வாங்கணும். அப்போதான் மேலும் மேலும் சேரும்னு சொல்வாங்க. இன்னைக்கு அது விக்கிற விலைக்கு வாங்க முடியுமா? அப்படின்னா என்ன செய்றது? பிரதிபலன் கருதாமல் நாம் செய்யும் உதவி அது எதுவாகவும் இருக்கலாம். அன்னதானம், ஆடைதானம், மளிகை பொருள்கள் தானம், நோட்பு புத்தகங்கள் தானம் என்று. நம்மால் முடிந்ததை இன்றைய நாளில் பிறருக்குக் கொடுத்து உதவலாம்.
அதைத்தான் மகாலட்சுமியும் விரும்புவாள். அந்த அழகான செயலை உங்களிடம் இருந்து வெளிப்படுத்திக் காட்டக்கூடிய நாள் தான் அட்சய திருதியை. இந்த நாளில் என்ன செய்வது? மகாலெட்சுமியின் திருவுருவப்படத்துக்கு என்ன பூ வாங்க முடிகிறதோ அதை வைங்க. துளசி இலையைக் கூட வைக்கலாம். கல்கண்டு, வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு நைவேத்தியத்துக்குப் போதும்.
மகாலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். குங்குமம், நாணயத்தால் அர்ச்சனை பண்ணலாம். உங்களால் என்னவெல்லாம் வாங்க முடிகிறதோ அதை வாங்கி பிறருக்குக் கொடுங்க. தங்கம் விக்கிற விலைக்கு அதை எல்லாம் வாங்க முடியாது. துணிமணிகள், உணவைத் தானமாகக் கொடுக்கலாம். தங்கம், பட்டு என எதுவும் வாங்கலாம். இன்றைய தினத்தில் எதைத் துவங்கினாலும் அது மிக அற்புதமாக வளரும். இந்த நாளுக்கு அவ்வளவு சிறப்பு.
கடை, தொழில் துவங்கலாம். வீடு, கார், பைக் வாங்கலாம். ரொம்ப வசதியா இருக்குறவங்க என்ன தானம் வேணாலும் கொடுக்கலாம். அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, மளிகைப்பொருள்களை உங்களால் எவ்வளவு வாங்க முடிகிறதோ அதை நம்மை விட ரொம்ப கஷ்டப்படுறவங்களுக்குத் தானமாகக் கொடுக்கலாம்.
இதற்காக ரொம்ப கஷ்டப்பட வேணாம். இதுவும் முடியாதவர்கள் ஒரே ஒரு வேளை சாப்பாடாவது ஒரு நபருக்கு தானமாகக் கொடுங்க. பிறருக்கு கொடுக்கணும்னு நினைச்சாலே மகாலட்சுமியின் அருள் கண்டிப்பா கிடைக்கும். இந்த நாளில் வழிபட எந்த நேரம் உகந்ததுன்னு பார்க்கலாமா…
30.04.2025 புதன்கிழமை (இன்று) அட்சய திருதியை. 29ம் தேதி இரவு 8.49 மணிக்குத் துவங்கும் திருதியை 30ந் தேதி மாலை 6.41மணி வரை இருக்கிறது. அதனால் 30ம் தேதி காலை 6 மணி முதல் 7மணிவரை, 9 மணி முதல் 10 மணிவரை, 11மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் வழிபடலாம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்க. அதனால இன்றைய நாளில் மகாலட்சுமியை வழிபட்டு அவளது அருளைப் பெறுவோம். அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றும் வழிபடலாம். உங்களால் முடிந்தளவு அன்னதானமும் செய்யலாம்.