வரும் ஏப்ரல் 30ம் நாளன்று அட்சய திருதியை வருகிறது. இந்த அற்புதமான நாளின் மகத்துவம் என்ன? நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா…
அட்சய திருதியை நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். ஆகவே, தானம் செய்யுங்கள். அதனால், வீட்டில் சகல சுபிட்சங்களும் நிறைந்திருக்கும். ஐஸ்வரியம் பெருகும். கடனில்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
.’அட்சய’ என்றால் வளருதல் என்று அர்த்தம். அதனால்தான் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கிற பாத்திரத்தை, அட்சயப் பாத்திரம் என்று அழைத்தார்கள். ஆக, அட்சயம் என்றால் வளருதல். சயம் என்றால் கேடு என்று அர்த்தம். அட்சயம் என்பது, கேடு இல்லாத, அழிவு இல்லாத பொருள் என்று பொருள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருதியை என்பது மூன்றாம் நாள். அமாவாசையில் இருந்து வரும் மூன்றாம் நாள் திருதியை எனப்படுகிறது. சித்திரை மாதத்தின் அமாவாசையின் மூன்றாவது நாளே அட்சய திருதியை நாள் என்று போற்றப்படுகிறது.
முதலில், அட்சய திருதியை நாளில் செய்யவேண்டியது வழிபாடு. இறைவனை வழிபட வழிபட, நாம் இன்னும் இன்னும் செம்மையாவோம். புத்தியில் தெளிவும் மனதில் திடமும் பேச்சில் இனிமையும் உடலில் வேகமும் பெறுவோம். இறைசக்தியின் நல்ல நல்ல அதிர்வுகள் யாவும் நமக்குள் வளர்ந்துகொண்டே இருக்கும். இது… அட்சய திருதியை எனும் நன்னாளின் மகத்துவம்.
இந்த நாளில், ஹோமம் செய்து பூஜிக்கலாம். ஜபங்கள் செய்து வணங்கலாம். பாராயணம் செய்து, கடவுளை ஆராதிக்கலாம். வீட்டில் தீபமேற்றி, சுவாமி படங்களுக்கு பூக்கள் அணிவித்து, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி என இனிப்புகள் படைத்து, வேண்டிக் கொள்ளலாம்.