பதஞ்சலியும் வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவம் கண்டது எப்படி தெரியுமா?

By Sankar Velu

Published:

கடவுளைக் காண்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அந்தக் காலத்தில் பெரிய பெரிய முனிவர்களும், துறவிகளும் பல்லாண்டுகளாக தவம் கிடந்து தான் கடவுளைத் தரிசித்துள்ளதாக நாம் பல கதைகளில் படித்திருப்போம்.

இன்றைய நவநாகரிக காலத்திலும் கடவுளைக் காண்பது பற்றி பலரும் பல்வேறு கருத்துகளை அறிவுஜீவிகள் போல சொல்லி வருகிறார்கள். ஆனால் எல்லாமே சொல்லப்பட்டது எதற்கு என்றால் அவரவர்களுக்குள் இறைவனைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சொல்லப்பட்டது. முதலில் உன்னிடம் இறைவனைக் காணும்போது நாளடைவில் எங்கும் கடவுள்மயமாகவே நீ காண்பாய்.

அப்போது தான் கடவுள் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார் என்ற தத்துவமே புரிய வரும் என்பதே தாத்பரியம். சரி. விஷயத்துக்கு வருவோம். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு ரசித்தது நம் எல்லாருக்குமே தெரியும். அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? வாங்க பார்ப்போம்.

நாராயணர் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார். அந்தப் பள்ளி கொண்ட பரந்தாமன் அடிக்கடி சிவபெருமான் ஆடிக்காட்டிய ஆனந்தத் தாண்டவத்தை நினைவுகூர்ந்து கொண்டே இருப்பார்.

அப்படி அவர் ஒருமுறை கூறும்போது சிவபெருமான் அவரது மனநிலையில் எழுந்தருள ஆரம்பிக்கிறார். அவரைப் பாற்கடலில் தாங்கிக் கொண்டு இருந்தது ஆதிசேஷன். இதற்குக் கணம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பெருமாள் கனக்க ஆரம்பிக்கிறார். அப்போது ஆதிசேஷன் ‘சுவாமி உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும். என்ன சொல்லு என்கிறார் பெருமாள். கொஞ்ச நேரமா உங்க கணம் அதிகமாகிக்கிட்டே இருக்கு’ என்று சொல்கிறது ஆதிசேஷன்.

Natarajar‘ஆமா ஆமா எடை கூடித் தான் இருக்கும். சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை நான் பார்த்து ரசிக்கிறேன். ஒருவேளை என்னோடு சேர்ந்து அவரும் இருப்பதால் எடை கூடியது போல தெரிகிறது.’அதற்கு பரந்தாமனிடம் ஆதிசேஷன் சொன்னது இதுதான்.

‘நீங்க மட்டுமே ஆனந்தத் தாண்டவத்தை ரசிக்கிறீர்களே… நானும் ரசிக்க வேண்டுமே’ என்கிறார். ‘அது அவ்வளவு சுலபமா கிடைக்காது. அதற்கு தவம் செய்ய வேண்டும்’ என்கிறார்.

‘எங்கே போய் செய்யணும்’னு கேட்கிறார். ‘பூலோகத்தில் தில்லை என்று ஒரு தலம் இருக்கிறது. அங்கு வியாக்ரபாதர் தவம் செய்கிறார். அவர் நடராஜரின் நடனத்தைத் தரிசிப்பதற்காகவே தவம் செய்கிறார். நீயும் அங்கு போய் தவம் செய்து கொள்’ என்று அவருக்கு வரம் கொடுக்கிறார்.

அதற்கு ஆதிசேஷன் பதஞ்சலி முனிவர் கோலம் கொண்டு வியாக்ரபாதருடன் நட்பு கொண்டு தவம் செய்கிறார். இருவருக்கும் எம்பெருமான் இறங்கி வந்து ஆனந்த தாண்டவ தரிசனம் தில்லையில் கொடுக்கிறார்.

தை மாதம் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்து அன்று எம்பெருமான் இந்த இரு முனிவர்களுக்கும் ஆனந்தத் திருநடனம் காட்டி அருளுகிறார்.

இருவரும் அன்று முதல் அந்த நடன தரிசனத்தைக் காணாது எந்த வேலையும் செய்வதில்லை என எம்பெருமானிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.