சிவபெருமானை வழிபடக்கூடிய பல முக்கியமான விரத நாள்களில் ஒன்று மார்கழி மாதம் வரக்கூடிய ஆருத்ரா திருநாள். திரு ஆதிரை என சொல்லப்படக்கூடிய இந்த நாள் சிவபெருமானுக்குரிய மிக முக்கியமாக ஒரு அபிஷேகம் செய்யக்கூடிய திருநாள். ஆருத்ரா அபிஷேகமும், நடராஜரின் ஆருத்ரா தரிசனமும் மிகவும் விசேஷமானது.
சிவபெருமான் அபிஷேகப்பிரியர். நாராயணன் அலங்கார பிரியர். சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்ணிக்கொண்டே இருந்தால் ரொம்ப பிடிக்கும். அதிலும் சிவபெருமானின் ஒரு ரூபம் நடராஜர் வடிவம். இதன் ஆனந்த தாண்டவம் அற்புதமானது. தில்லையில் எழுந்தருளிய இறைவன் நடராஜர் கோலத்துடன் காட்சி தருகிறார்.
இறைவன் ஒவ்வொரு திருத்தலங்களிலும் ஆனந்த தாண்டவம், ஊர்த்தவ தாண்டவம் இப்படி பல நடனங்கள் ஆடிக் காட்சி தருகிறார். நமது மனம் நிலையாக அமைதியாக இருக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டே இருக்கு. அது அப்படி இருந்தாலும் அதை இயக்க வேண்டும் என்றால் நடராஜரின் நடன வடிவத்தின் தத்துவத்தை நாம் செயல்வடிவமாகக் கொண்டு வரலாம்.
கோவிலுக்குச் சென்று நடராஜரை வழிபடுகையில் அவர் ஒரு நடனம் ஆடும் நடராஜ மூர்த்தி என்று மட்டும் நினைக்கக்கூடாது. அவருடைய நடன வடிவம் இதுதான். ஒரு காலை நிலத்தில் பலமாக ஊன்றி மற்றொரு காலைத் தூக்கிய பாதராக நமக்குக் காட்சி தருகிறார். அதைக் குஞ்சிதபாதம்னு சொல்வாங்க. நாம் சுழல வேண்டும். ஆட வேண்டும் என்று சொன்னால் முதலில் நிலையாக நிற்கப் பழக வேண்டும். பரதம் பழகுபவர்களுக்குத் தெரியும். நடராஜரின் வடிவத்தில் நின்றால் தான் நாம் ஆடப் பழக முடியும்னு சொல்லிக் கொடுப்பாங்க.
அப்படித்தான் மனம் ஒரு நிலையில் நின்றால் தான் நாம் சுழல்வதற்கும், இயங்குவதற்கும் சரியாக இருக்கும். அப்படின்னா மனதை ஒருநிலைப்படுத்தி நாம் தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அதற்கு நல்ல நாள், நல்ல மாதம், நல்ல நட்சத்திரம் வேண்டும். இப்படி எல்லாம் சேரும் காலத்தில் நம் மனதை ஒருநிலைப்படுத்தி தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும்போது நிலைத்த உறுதியான தன்மையோடு இயங்கும் தன்மையும் சேர்த்துக் கிடைக்கிறது.
இந்த நடராஜரை மார்கழி மாதத்தில் பவுர்ணமி, திருவாதிரை சேர்ந்து வரும் நாளில் சிறப்பாக வழிபடுவர். இன்று நடராஜருக்கு குளிர குளிர அபிஷேகம் செய்வார்கள். அந்த வகையில் சிவனை வணங்கினால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் வணங்கியதற்குச் சமம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



