ஆடியில் அவதரித்தவள் ஆண்டாள். பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருக்கிறாள். அப்படி விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’. ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும்.
ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.
ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே, ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை, முன்னதாகவே சொல்லிவைத்து பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெற்ற கிளியை பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
கண்ணனுக்காக தயார் செய்யப்பட்ட மலர் மாலையை, தான் சூடி அழகு பார்த்த ஆண்டாளின் வழியைப் பற்றி, இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைதான், பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி பெருமாளுக்கும், சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் சாத்தப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் தோன்றிய செவ்வாய்க்கிழமையில் துளசியை பூஜித்து, விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



