பொதுவாகவே வெள்ளிக்கிழமைன்னா எல்லாருக்கும் சந்தோஷம். அதிலும் பெண்களுக்கு அளவுகடந்த விசேஷம். அன்று பெண்கள் கோவில் கோவிலாகச் சென்று வழிபடுவர். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளே வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்பாளுக்கு விசேஷமான தினம். அம்பாளை ஒரு தாயா, மகளா, உற்ற துணையாகக் கொண்டாடக்கூடிய வாய்ப்பைத் தரக்கூடிய நாளாக ஆடி வெள்ளி வருகிறது.
இந்த ஆண்டு 5 வெள்ளிக்கிழமை ஆடி மாதம் வருகிறது. முதல் வெள்ளி 18.7.2025ம் தேதி (நாளை) வருகிறது. தொடர்ந்து 25.7.2025, 1.8.2025, 8.8.2025, 15.8.2025 ஆகிய 5 ஆடி வெள்ளி வருகிறது. முதல் ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்யலாம்.
கோவில்களில் அதிகமான பெண்கள் இருப்பதால் அங்கு இந்த பூஜை செய்யப்படுகிறது. வீட்டில் 2 அல்லது 3 பெண்கள் இருந்தாலும் செய்யலாம். தனியாக இருந்தாலும் செய்யலாம். முப்பெருந்தேவியரின் நலனும், முப்பத்து முக்கோடி தேவர்களின் நலனையும் மாதம் பிறந்ததுமே கிடைக்கச் செய்கிறது இந்த வழிபாடு. 2வது வெள்ளிக்கிழமையில் அம்பிகையை மங்கள கௌரியாகப் பாவித்து விரதமிருந்து வழிபடலாம்.
3வது வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்குத் தளிகை போட்டு வழிபாடு செய்யலாம். தளிகை என்றால் விதவிதமான கலவை சாதம் படையலிட்டு வழிபாடு செய்வது. சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சம்பழ சாதம், கருவேப்பிலை சாதம் என 5 வகையாகத் தயார் செய்யலாம். இதை 5வது வாரமும் செய்யலாம். 4வது வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி நோன்பு இருந்து வழிபட வேண்டும். கடைசி வெள்ளி ஆகஸ்டு 15, 2025 அன்று வருகிறது.
அன்று அம்பாளுக்கு மனசுக்குப் பிடித்த விஷயமான அன்னதானம் செய்வது சிறப்பு. குறைந்தபட்சம் 2 பேருக்காவது அன்னதானம் செய்யலாம். மாடுக்கு அகத்திக்கீரை தானம் செய்யலாம். வாய்ப்புள்ளவர்கள் கோமாதா பூஜை செய்யலாம். இதை வழிபாடு செய்ய பாவங்கள் நீங்கி செல்வ வளம் சேரும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



