ஒரு மனிதன் 7 பிறவிகள் தான் பிறப்பானா? 8வது பிறவி பிறக்க மாட்டானா? முதலில் நாம் எப்போது பிறந்தோம் என்று யாருக்கும் தெரியாது. இன்று பிறந்திருக்கிறோம் என்றுதான் தெரியும். நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றால் ஒரு கதைப்புத்தகத்தில் முதலிலும், கடைசியிலும் சில பக்கங்கள் இல்லை. நடுவில் மட்டும் இருக்கிறது. அதுதான் நம் வாழ்க்கை. எப்போ வந்தோம்? எப்போ போவோம் என்று தெரியாது. இன்று இருக்கிறோம்.
வாழ்கின்றோம் என்று தான் தெரிகிறது. ஆனால் தெய்வீக நூல்களை எடுத்துப் பார்த்தால் தொடர்ந்து இறந்து பிறந்து வந்து கொண்டே இருக்கின்றோம் என்றுதான் சொல்கின்றன. முக்தி என்ற இறைவனின் திருவடிகளை அடைகிறவரை இது தொடரத்தான் செய்யும். இதற்கு முடிவில்லை. நிறைய பக்தர்கள் இறைவனைப் பாடும்போது பிறவா நிலை வேண்டும் என்றுதான் பாடுகின்றனர். மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம்.
இந்தப் பிறவிகளை 7 பிறவிகள் என்று ஏன் சொல்கிறோம் என்றால் 7 முறை தான் பிறப்பான் என்றல்ல. 7 விதமான பிறவிகள். நாம் எப்போதும் எந்தவித தெய்வகாரியத்தில் ஈடுபட்டாலும் விண்ணுலகில் உள்ள தேவர்களைத் தொழுகின்றோம். மனிதனாக இருக்கும்போதே தெய்வ குணத்தோடு வாழ்ந்தால் தேவனாகப் பிறக்கலாம். மனிதனாகப் பிறந்து மனித குணத்தோடு வாழ்ந்தால் மீண்டும் மனிதனாகப் பிறப்பான்.
3வதாக நான்கு கால்களை உடைய கால்நடையாக பிறவி. அடுத்து பறவை, ஊர்வன, நீரிலேயே பிறந்து வாழ்வன, மரம், செடி, கொடி தாவரங்கள் என்ற பிறவி. எந்த ஒரு பிறவியாக இருந்தாலும் இந்த 7க்குள் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அதுதான் 7 பிறவிகள். இந்த 7 இனங்களில் ஏதோ ஒன்றாகத் தானே நாம் பிறக்கப் போகின்றோம். அதனைத் தான் சமய நூல்கள் ஏழு பிறவிகள் என்கின்றன. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீமுரளீதர சுவாமிஜி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



