ஜாதகங்களில் ராசி தெரிந்தால் தான் எல்லா பலன்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணநலன்கள் உண்டு. அதே போல அவர்களுக்கு தனித்தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.
இப்போது இருப்பதே 12 ராசி தான். இந்த ராசிக்கு உரியவர்களை நாம் 4 விதமாகப் பிரிக்கலாம். அவர்கள் யார் யார்? அவர்களுக்கு உரிய பரிகாரங்கள் என்ன? அவர்கள் பெறப்போகும் பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
12 ராசிகளில் நீர் ராசிகள், நில ராசிகள் நெருப்பு ராசிகள், காற்று ராசிகள் என 4 விதமாக பிரித்துள்ளனர்.
நெருப்பு ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நெருப்பு தத்துவத்தை தன்னுள்ளே கொண்டவர்கள். இவர்கள் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பழங்கள் வாங்கித்தர பாவங்கள் விலகும்.
நில ராசிகள்
பஞ்ச பூத தத்துவத்தில் நில தத்துவத்தை உணர்த்தும் ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம். இவர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிருத்வி லிங்கத்தை பிரதோஷ தினத்தில் வழிபட நன்மைகள் நடைபெறும்.
அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர தோஷங்களும் பாவங்களும் விலகும்.
காற்று ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். இவர்கள் காளகஸ்தியில் உள்ள திருக்காளத்தி நாதரை பிரதோஷ காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வழிபட புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அங்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்குச் சென்று பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும்.
நீர் ராசிகள்
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூத தத்துவத்தில் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். திருச்சி அருகே திருவானைக்காவில் எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தான் நீர்தலம்.
இந்த ராசிக்காரர்கள் பிரதோஷ காலத்தில் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தர செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆகாய தலம்
ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜரை வழிபட வேண்டும். பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணிய பலன்கள் கிடைக்கும். 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடலாம்.
பஞ்ச லிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபடுவது சிறப்பு. சனி மகா பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வது ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.