சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்.. உணர்த்துவது என்ன?

திருப்பூர்: தமிழ் கடவுள் முருகனிடம் உள்ள வேல் தீமையை அழிக்கும் சக்தி கொண்டது. சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் தீமை அழியும் நன்மை பெருகும் என்று…

Kasi Theertham

திருப்பூர்: தமிழ் கடவுள் முருகனிடம் உள்ள வேல் தீமையை அழிக்கும் சக்தி கொண்டது. சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் தீமை அழியும் நன்மை பெருகும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

சிவன்மலை

சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆண்டவன் உத்தரவு பெட்டி

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்த கலசம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

மண் விளக்கு

கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி முதல் மண்விளக்கு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கடந்த 1ஆம் தேதி பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பலரும் உயிரிழந்தனர். அதனை முன் கூட்டியே சிவன்மலை ஆண்டவர் உணர்த்தினார் என்று தகவல் வெளியானது.

காசி தீர்த்தம்

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையை சேர்ந்த சேர்மராஜ் என்ற பக்தரின் கனவில் காசி தீர்த்தம் வைக்க உத்தரவு கிடைத்தது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. தனது கனவு குறித்து பேசிய சேர்மராஜ், கடந்த எட்டு வருடங்களாக காசிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறேன், முருகன் கனவில் தோன்றி காசிதீர்த்தத்தை சிவன்மலை பெட்டியில் வை என சென்னார். காசி தீர்த்தம் கொண்டு வந்தேன் என்று கூறினார்.

ஆன்மிகம் செழிக்கும்

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். காசி தீர்த்தம் வைத்துள்ளதால், நன்மை பெருகும் ஆன்மிகம் செழிக்கும். இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும் என்று சிவாச்சாரியார் கூறியுள்ளார்.