ஆடித்தபசு விழா தோன்றியதன் வரலாறு இதுதான்…

By Meena

Published:

ஆடிமாத பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்று ஆடித்தபசு விழா ஆகும். கோமதி அம்மனுக்கு இறைவன் சங்கரநாராயணாக காட்சி கொடுத்த நாளே ஆடித்தபசு ஆகும். இறைவன் சங்கரநாராயணாக காட்சி கொடுத்த திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணர் ஆலயம்.

ஆடி மாத பவுர்ணமி அன்று உத்திராட நட்சத்திரத்தில் நிகழும் இந்த ஆடித்தபசு திருவிழா சங்கரநாராயணர் திருத்தலத்தில் 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா ஜூலை 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆடித்தபசு விழா தோன்றியதற்கு ஒரு புராண வரலாறு இருக்கிறது.

‘தபசு’ என்றால் தவம் என்று பொருள். அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். சங்கன் என்ற நாகர் சிவபெருமான் மீதும், பதுமன் என்ற நாகர் சிவபெருமான் மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். ஒருநாள் இருவரும் சிவபெருமான் பெரியவரா? மஹாவிஷ்ணு பெரியவரா? என்று சண்டையிட்டனர். அதற்கு முடிவு தேடி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையிட, அவரோ பார்வதி தேவியை தவம் செய்யும்படி கூறினார்.

அதன்படி தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்தில் பார்வதி தேவி கோமதி அம்மனாக தவம் செய்தார். அப்போது சிவபெருமான் சங்கரநாராயணாக காட்சிக் கொடுத்தார். அரியும் அரணும் ஒன்று என்று உலகிற்கு உணர்த்த உடம்பின் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி மஹாவிஷ்ணுவாகவும் காட்சி கொடுத்த நாளே ஆடித்தபசு நாளாகும்.

இந்த காட்சியை கோமதி அம்மனும், சங்கன் மற்றும் பதுமன் ஆகியோர் தரிசித்து நற்பேறு பெற்றனர். திருநெல்வேலி மாவட்டதில் ஆடித்தபசு விழா மிக முக்கியமானதாக ஒன்றாக கருதப்படுகிறது. இன்றளவும் அற்புதங்களை நிகழ்த்தும் இந்த திருத்தலத்தில் உள்ள சங்கரநாராயணர் மற்றும் கோமதி அம்பாளை தரிசித்தால் நம் வாழ்வில் தள்ளி போகும் சுப நிகழ்வுகள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.

Tags: ஆடி