டெக்னோ எலக்ட்ரிக் & என்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் (TEECL) நிறுவனத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பிரிவான டெக்னோ டிஜிட்டல், தனது 36 மெகாவாட் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டரை சென்னை, சிப்காட் ஐடி பார்க்கில் திறந்து வைத்துள்ளது.
இந்த அதிநவீன வசதியை உருவாக்க, $175 மில்லியன் (சுமார் ரூ.1,535 கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியா முழுவதும் அளவிடக்கூடிய, நிலையான, மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட டெக்னோ டிஜிட்டலின் $1 பில்லியன் தேசிய முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
2,00,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் அமைந்துள்ள இந்த டேட்டா சென்டர், சுமார் 2,400 ஹை-டென்சிட்டி ரேக்குகளை நிறுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரேக்கிற்கு 10 கிலோவாட் முதல் 50 கிலோவாட் வரையிலான மின்சாரத்திறனை வழங்கும்.
இந்த வசதி, சென்னையின் முக்கிய ஐடி பெருவழி பகுதியில் அமைந்துள்ளது. இது, காலநிலை அபாயங்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதோடு, இந்தியாவின் இணைய முதுகெலும்பாக செயல்படும் பல்வேறு கேபிள் லேண்டிங் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு நெட்வொர்க்குகளுடன் தடையற்ற இணைப்பை வழங்குகிறது.
இந்த டேட்டா சென்டரில், நம்பகத்தன்மை மற்றும் அனைத்து வானிலை செயல்பாட்டிற்காக, இரு தனித்தனி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் வகையில், 110 கிலோவோல்ட் ஜிஐஎஸ் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது யுபிஎஸ் அமைப்புகளை பயன்படுத்துவதோடு, குளிரூட்டலுக்கு சென்ட்ரிபியூகல் வாட்டர்-கூல்டு சில்லர்கள் மற்றும் அடியாபேடி கூலிங் டவர்களையும் கொண்டுள்ளது.
டெக்னோ டிஜிட்டலின் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில், “நவீன டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஹைப்பர்-அவேய்லபிலிட்டி, தடையற்ற அளவிடுதல், வலுவான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு உறுதி ஆகியவை தேவைப்படுகின்றன. இந்தியாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த டேட்டா சென்டர், நிலையான, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மற்றும் கிளவுட்-ஆப்டிமைஸ்டு தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.
இந்தியா முழுவதும் 250 மெகாவாட் மொத்த திறன் கொண்ட ஹைப்பர்ஸ்கேல் மற்றும் எட்ஜ் டேட்டா சென்டர்களை நிறுவ, டெக்னோ எலக்ட்ரிக் & என்ஜினியரிங் நிறுவனம் மே 2025-இல் டெக்னோ டிஜிட்டல் என்ற டிஜிட்டல் உள்கட்டமைப்பு பிரிவை தொடங்கியது. சென்னை தவிர, கொல்கத்தா மற்றும் நொய்டாவிலும் ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் அமைப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
