புதிய வாடகை ஒப்பந்த விதிகள் அமல்.. இனி உங்கள் இஷ்டத்திற்கு வாடகையை உயர்த்த முடியாது.. 2 மாத அட்வான்ஸ் தான் வாங்க வேண்டும்.. வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம்.. வீடு ஓனர்கள் அதிர்ச்சி?

இந்தியாவில் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மக்கள் அதிக அளவில் குடியேறி வருவதால், வாடகை நடைமுறையை எளிதாக்கவும், ஒப்பந்தங்களை சீராக்கவும், பிரச்சனைகளை விரைந்து தீர்க்கவும் மத்திய அரசு ‘புதிய வாடகை ஒப்பந்த விதிகள்…

rental

இந்தியாவில் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மக்கள் அதிக அளவில் குடியேறி வருவதால், வாடகை நடைமுறையை எளிதாக்கவும், ஒப்பந்தங்களை சீராக்கவும், பிரச்சனைகளை விரைந்து தீர்க்கவும் மத்திய அரசு ‘புதிய வாடகை ஒப்பந்த விதிகள் 2025’ என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட்டின் அடிப்படையில் சில புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் உள்ளது.

புதிய சட்டத்தின்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களுக்குள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த பதிவை மாநில சொத்துப்பதிவு இணையதளங்கள் மூலமாகவோ அல்லது உள்ளூர் பதிவாளர் அலுவலகத்திலோ மேற்கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்ய தவறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.

அபராதங்களை தவிர்க்க ஒப்பந்தங்களை இரண்டு மாதங்களுக்குள் முறையாக பதிவு செய்ய வேண்டும். குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை தொகை போல இரண்டு மாத வாடகை தொகைக்கு மட்டுமே அட்வான்ஸ் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். வணிக வளாகங்களுக்கு ஆறு மாத வாடகைக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வாடகை உயர்வு பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படியே இருக்க வேண்டும், மேலும், அது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். வெளியேற்றுவதற்கான நடைமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதால், வாடகைக்கு இருப்பவர்களை திடீரென வெளியேற சொல்ல முடியாது. வாடகை தொடர்பான பிரச்சினைகளை 60 நாட்களுக்குள் தீர்க்க சிறப்பு வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதுகுறித்து பயனர் ஒருவர் “பெங்களூரு வீட்டு உரிமையாளர்களுக்கு இனி சிக்கல் தான் என்றும், இன்னொருவர் “இதனை எனது வீட்டு உரிமையாளரிடம் காட்டினேன். அவர் இது ஏஐ என்று சொல்கிறார் என்றும் மற்றொருவர் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வெளியேயும் ஒரு பலகை இருக்கும். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும் என்று, அதை போல் தான் இந்த விதி, யாரும் கடைபிடிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட விதிகள் 11 மாதங்களுக்கு குறைவான ஒப்பந்தங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியால் வீட்டு உரிமையாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம். வாடகை கட்டணத்திற்கான மூலத்தில் வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ. 2.4 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பணப்புழக்கத்தை மேம்படுத்துகிறது. வாடகை வருமானம் இனி ‘வீட்டுச் சொத்தில் இருந்து கிடைக்கும் வருமானம்’ என்ற பிரிவின் கீழ் வரும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாடகை தவணைகள் தவறினால், பிரச்சினை விரைவான தீர்வுக்காக வாடகை தீர்ப்பாயங்களுக்கு கொண்டு செல்லப்படலாம். மலிவு விலையில் வாடகை நிர்ணயம் செய்பவர்கள் அல்லது எரிசக்தி திறன் கொண்ட மேம்பாடுகளை செய்யும் வீட்டு உரிமையாளர்களுக்கு மாநிலத் திட்டங்களின் கீழ் வரிக் குறைப்பு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இனி புதிய விதிகளின்படி வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது எப்படி? என்பதை பார்ப்போம். முதலில் உங்கள் மாநில சொத்துப் பதிவு இணையதளத்திற்கு செல்லவும். இரு தரப்பினரின் அடையாளச் சான்றுகளை பதிவேற்றவும். வாடகை விவரங்களை பூர்த்தி செய்யவும். மின்னணு கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் எளிதில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுவிடும்.