வங்கியில் பணம் போட்டாலும் சரி, பணம் எடுத்தாலும் சரி வருமான வரித்துறை வீட்டுக்கு வந்துவிடும்.. ஐடி ரெய்டில் இருந்து தப்பிக்க என்ன செய்யக்கூடாது? என்ன செய்ய வேண்டும்? சின்ன தப்பு செஞ்சாலும் மாட்டிக்கிடுவீங்க.. ஜாக்கிரதை..!

வருமான வரித் துறை என்பது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். மக்களின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் முதன்மை…

income

வருமான வரித் துறை என்பது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். மக்களின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கம். குறிப்பாக, அதிக அளவிலான பண பரிவர்த்தனைகள், வருமான வரித் துறையின் கவனத்தை ஈர்க்கும். எனவே, எந்தெந்த வகையான பணப் பரிவர்த்தனைகளுக்கு என்னென்ன வரம்புகள் உள்ளன, அவற்றை மீறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல்

சேமிப்புக் கணக்கு : ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் ₹10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை போட்டால், அது வருமான வரித் துறையின் கண்காணிப்புக்கு உட்படும். இது ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது பல பரிவர்த்தனைகளாகவோ இருக்கலாம்.

நடப்புக் கணக்கு : தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான நடப்பு கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தைப் போட்டால், வருமான வரி துறைக்கு தெரிவிக்கப்படும்.

சம்பளம் மற்றும் பிற வருமானங்கள்: உங்களுடைய வங்கி கணக்கில், எந்த வகையிலும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டால், அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அனுப்பப்படும்.

உதாரணமாக ஒரு நிதியாண்டில் ₹5 லட்சம் வைப்பு, ₹5 லட்சம் வைப்பு என பலமுறை வைப்பு செய்து, மொத்த தொகை ₹10 லட்சத்தை தாண்டினால், நீங்கள் வருமான வரித் துறையின் விசாரணைக்கு உட்படுவீர்கள். அதிக அளவில் ரொக்கமாக பணத்தை வங்கி கணக்கிலிருந்து திரும்ப பெறுவதையும் வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது.

ஒரு நிதியாண்டில் வங்கி கணக்கிலிருந்து ₹20 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக திரும்ப பெற்றால், அது வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். இது ₹20 லட்சத்திலிருந்து ₹1 கோடி வரை உள்ள தொகைக்கு 2% வரியாக பிடித்தம் செய்யப்படும்.

ஒரு நிதியாண்டில் ₹1 கோடிக்கு மேல் ரொக்கமாக திரும்பப் பெற்றால், 5% வரி பிடித்தம் செய்யப்படும். இந்த பணத்தை நீங்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும்போது, அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்து திரும்ப பெறலாம்.

உதாரணமாக ஒருவர் ஒரு நிதியாண்டில் ₹1.1 கோடி திரும்ப பெற்றால், முதல் ₹20 லட்சத்துக்கு எந்த வரியும் இல்லை. ₹20 லட்சத்திலிருந்து ₹1 கோடிக்கு அதாவது ₹80 லட்சத்திற்கு 2% வரியாக ₹1.6 லட்சம் பிடித்தம் செய்யப்படும். மீதமுள்ள ₹10 லட்சத்துக்கு 5% வரியாக ₹50,000 பிடித்தம் செய்யப்படும். மொத்தமாக ₹2.1 லட்சம் வரி பிடித்தம் செய்யப்படும். இதை திரும்ப பெற, ரொக்கம் எடுத்ததற்கான சரியான காரணத்தையும், அது வருமானத்திற்குரியது அல்ல என்பதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவருடைய வருமானத்தைவிட அவருடைய செலவுகள் அதிகமாக இருந்தால், அது வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும். குறிப்பாக, அதிக அளவில் கிரெடிட் கார்டு பில்கள், ஆன்லைன் ஷாப்பிங், சுற்றுலா செலவுகள் போன்றவை கண்காணிக்கப்படும்.

கிரெடிட் கார்டு பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் போன்ற வருமானங்களும், வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்படும். எனவே, திடீரென அதிக அளவில் இதுபோன்ற வருமானங்கள் இருந்தால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

₹30 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை பணமாக வாங்கினால், அது வருமான வரி துறைக்கு தெரிவிக்கப்படும்.

ஒரு நிதியாண்டில் ₹10 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பங்குகளை வாங்கினால், அதுவும் வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும். திருமணங்கள் அல்லது பிற நிகழ்வுகளில் ₹50,000-க்கு மேல் பெறும் பரிசுகள் வருமான வரிக்கு உட்பட்டவை. அதிக செலவில் வெளிநாடுகளுக்கு செல்வது, வருமான வரித் துறையின் சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

சிறு வணிகர்கள் தங்கள் பண பரிவர்த்தனைகளைக் கவனமாக கையாள வேண்டும். முடிந்தவரை நடப்புக் கணக்கின் மூலம் மட்டுமே பணப் பரிவர்த்தனைகளை செய்வது பாதுகாப்பானது. அனைத்து வரவு செலவு கணக்குகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

வணிகத்தில் இருந்து வரும் பணத்தை, அரசு திட்டங்கள், காப்பீடுகள் அல்லது நிலையான வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வது நல்லது. வருமான வரித் துறையிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, காப்பீடுகளில் முதலீடு செய்வது ஒரு சிறந்த வழி. இது முதலீடாக கருதப்படாவிட்டாலும், மிக குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டு தொகையை பெற முடியும். இது உங்கள் மருத்துவ செலவுகளைக் குறைப்பதுடன், ₹25,000 வரை வரி விலக்கு பெறவும் உதவுகிறது. இதுபோன்ற சரியான முறையில் நிதி மேலாண்மை செய்தால், வருமான வரித் துறையின் சோதனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஃபார்ம் 26 AS என்பது ஒரு முக்கியமான ஆவணம். இதில், உங்கள் வங்கி கணக்கில் நடந்த அனைத்துப் பணப் பரிவர்த்தனைகள், பிடித்தம் செய்யப்பட்ட வரி (TDS) போன்ற தகவல்கள் இருக்கும். வருமான வரித் துறையின் நோட்டீஸ் வந்தால், இந்த ஆவணத்தின் மூலம், உங்கள் பரிவர்த்தனைகள் குறித்து விளக்கமளிக்க முடியும்.

மொத்தத்தில் ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை முறையாக கணக்கிட வேண்டும். பண பரிவர்த்தனைகளை முடிந்தவரை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது பாதுகாப்பானது. அத்துடன், வருமான வரி விதிகளையும், வரம்புகளையும் அறிந்து செயல்படுவது அவசியம். இதன் மூலம், வருமான வரித்துறையின் தேவையற்ற விசாரணைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.