நவம்பர் மாதம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளும், அந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவதும்தான். அப்படிப்பட்ட குழந்தைகள் தின சிறப்புகளை தற்போது பார்ப்போம்
- உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் நவம்பர் 14-ம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது வைத்திருந்த அளவில்லா அன்பினால்தான்
- உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா என்பதும், குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
- குழந்தைகள் தினத்தில் குழந்தைகளிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
- குழந்தை தொழிலாளர்கள் இல்லாத ஒரு நாடாக இந்தியாவை மாற்றி அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் உண்மையான நோக்கம் ஆகும்.
- குழந்தைகள் வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலான விஷயம். குழந்தைகளை சமாதானப்படுத்த பல நேரங்களில் பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் குழந்தைகள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.
- குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்ல விஷயங்கள்தான் அவர்களுடைய எதிர்காலத்தின் முக்கிய தேவை. இந்த வயதில் குழந்தைகள் நல்ல விஷயத்தை கற்றுக்கொண்டால் அது பசுமரத்தாணி போல் பதிந்துவிடும்
- குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டாமல் மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் கனவு என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதனை நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், கூர்மையாக கவனித்து அந்த குழந்தைக்கு தேவையானதை சரியான நேரத்தில் கொடுத்தால் நாளை அந்த குழந்தை சாதனையாளராக மாறிவிடும்