சமஸ்கிருத வார்த்தையான கிரகணம் என்றால் மறைத்து வைத்தல் என்று பொருள். ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தால் அது சூடாமணி சூரிய கிரகணம் எனப்படும் என புராணங்கள் கூறுகின்றன. சர்வதாரி வருடத்து முதல் சூரிய கிரகணம் ஆனி மாதம் 2ம் திகதி அதாவது 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி மிருகசீரிட நட்சத்திரத்தில் இந்திய நேரப்படடி காலை 10 மணி 22 நிமிடமளவில் ஆரம்பித்து பகல் 11 மணி 50 நிமிடமளவில் மத்ய பாகமாகி பகல் 01 மணி 41 நிமிடமளவில் நிறைவடைகிறது.
இந்து மத நம்பிக்கையின்படி, கிரகணமென்பது இராகு அல்லது கேது கிரகம் சூரியனை அல்லது சந்திரனை விழுங்கி பின் கக்குவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் இராகுவினால் அல்லது கேதுவினால் விழுங்கி கக்கப்படும் சந்திரனோடு கொடிய விசம் வெளிவிடப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த விசமானது நமக்கு பல தீமைகளைத் தரும் என சாஸ்திரங்கள் சொல்கின்றது. தற்கால விஞ்ஞானமும் சூரிய சந்திர கிரகண வேளையில் நமக்கு தீமை விளைவிக்கக் கூடிய கதிர் வீச்சு இருக்கும் என ஒப்புக்கொள்கிறது. கிரகண வேளையில் உடலுறவு கொள்ளுதல் கூடாது. அவ்வேளையில் கொள்ளும் உடலுறவால் கருத்தரிக்க நேர்ந்தால் குழந்தை ஊனத்துடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சூரிய கிரகணம் ஆரம்பிப்பதற்கு 4 சாமத்திற்கு முன் சாப்பிட வேண்டும் சந்திர கிரகணம் ஆரம்பிப்பதற்கு 3 சாமத்திற்குமுன் சாப்பிட வேண்டும் . கிரகண காலத்திற்குமுன் சமைத்த உணவை கிரகணத்திற்கு பின்னர் சாப்பிடக்கூடாது. கிரகணத்திற்குபின் சமைத்து சாப்பிடமுடியாத சூழலென்றால், சமைத்த உணவுகளை வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைத்து அவற்றின் மேல் ஒரு சில தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். இது கிரகண நேரத்தில் மதரீதியான விசத்தினாலோ அல்லது விஞ்ஞான ரீதியான தீய கதிர்களினாலோ நமக்கு ஏற்படக் கூடிய தீய விளைவுகளை தடுக்கக் கூடியதாகும். மற்றும் நாமும் மோதிரமாகவோ அல்லது வேறு விதமாகவோ தர்ப்பை புல்லினை அணிந்திருப்பது பாதுகாப்பினைத் தரும். தர்ப்பைப்புல் கிடைக்காதவர்கள் அருகம்புல் பயன்படுத்தலாம். துளசி, வில்வ இலைகளைக்கூட இப்படி பயன்படுத்தலாம்….
கிரகணத்திற்கு முன்பே விளக்கேற்றி கிரகணம் முடியும்வரை விளக்கு எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும்.. கர்ப்பிணி பெண்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லக்கூடாது. தவிர்க்கமுடியாத காரணங்களினால் வெளியில் செல்ல நேர்ந்தால் சூரிய கதிர்கள் நேரடியாக உடல்மீது படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிரகணத்தின்போது உணவருந்துதல் கூடாது, தண்ணீர்கூட குடிக்கக்கூடாது. கிரகணம் முடிந்தபின் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி, தானும் குளித்து சுவாமி படங்களுக்கு விளக்கேற்றிய பின்னரே மற்ற வேலைகளை தொடங்க வேண்டும். கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடந்தால் கலந்து கொள்ளலாம். வீட்டில் தினமும் பூஜை செய்யும் வழக்கமுடையவர்கள் காலையில் பூஜை செய்திருந்தாலும், கிரகணம் முடிந்தபின் மீண்டும் பூஜை செய்ய வேண்டும்.. கிரகண வேளையில் இறைவனை துதிப்பது மட்டுமே வேலையாக இருக்கவேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றது.