‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு தென்னிந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்குக் காணலாம்.
முதலாவதாக ஏற்காட்டின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்திருக்கும் எமரால்டு ஏரியைக் காணலாம். இங்கு படகு சவாரி செய்து இயற்கை அழகைக் காணலாம். இங்கு சுயமாக இயக்கப்படும் படகுகளும் நியாயமான கட்டணங்களில் இயக்கப்படுகின்றன.
அடுத்ததாக காண வேண்டியது ஏற்காட்டிலே மிக உயரமான இடமான பகோடா பாயிண்ட். இது பேருந்து நிலையத்தில் இருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் உச்சியில் சென்றுப் பார்த்தால் ஏற்காட்டின் மொத்த அழகும் தெரியும். அதன் அருகிலேயே மலை உச்சியில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது. அதையும் தரிசித்து விட்டு வரலாம்.
அதன் பின்பு நாம் சென்று பார்க்க வேண்டிய இடம் ஏற்காட்டின் பட்டுப் பண்ணை மற்றும் தாவரவியல் பூங்கா ஆகும். இங்கிருக்கும் பட்டுப் பண்ணை மிக பிரபலமானது. பட்டுப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சியைக் காண்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதே போல் தாவரவியல் பூங்காவில் குறிஞ்சி மலர், 30 வகையான ஆர்கிட் வகைகள், அரிதான தாவரங்கள் ஆகியவற்றைக் காணும் போது மனதிற்கு இதமாக இருக்கும்.
அடுத்ததாக ஏற்காட்டில் சிறப்பு வாய்ந்த மற்றும் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடி ஆகும். இந்த நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும். மேலும் பியர்ஸ் குகை, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில், மான் பூங்கா, கொட்டச்சேடு தேக்கு காடு ஆகியவையும் ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
ஏற்காட்டில் கோடைக் காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் வரை நடக்கிறது. அதன் பின்பு மழைப்பொழிவு இருக்கும். அடுத்ததாக அக்டோபர் முதல் முதல் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த குளிர்காலத்தில் வெப்பநிலை 13 டிகிரி முதல் 25 டிகிரி வரை நிலவும். இந்த நேரத்தில் ஏற்காடு செல்வது மிக சிறப்பாக இருக்கும்.