பாசந்தி என்பது அனைவரும் விரும்பக்கூடிய அருமையான ஒரு இனிப்பு வகையாகும். வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டே இந்த பாசந்தியை நாம் செய்யலாம். பால் மற்றும் நட்ஸ்கள் சேர்த்து செய்வதால் இது குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய ஒரு உணவு தான்.
பாசந்தி என்ற பெயரைக் கேட்டதும் இதை செய்வது மிகவும் கடினம் என்று நினைக்கத் தேவையில்லை. இதை மிக எளிதாக செய்து வீட்டினரிடமும் விருந்தினரிடமும் பாராட்டு பெறுவதோடு நமக்கு பிடித்த ஒரு இனிப்பு வகையை நாமே செய்து சாப்பிட்ட ஒரு திருப்தியும் ஏற்படும்.
பாசந்தி செய்வதற்கு தேவையான பொருட்கள்
- பால் – 2 லிட்டர்
- சீனி- 200 கிராம்
- குங்குமப்பூ- சிறிதளவு
- ஏலக்காய் பொடி- சிறிதளவு
- முந்திரி, பாதாம், பிஸ்தா- சிறிதளவு
செய்முறை
பாஸந்தி செய்வதற்கு நல்ல அடி கனமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தில் பாலினை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
பால் கொதிக்க துவங்கியதும் பாலை குறைந்த தீயில் வைத்து நன்றாக வற்ற விட வேண்டும்.
பால் நன்கு வற்றி பாதியான பிறகு அதில் 200 கிராம் சீனியை சேர்த்து நன்கு கலக்கவும்.
மேலே ஆடைகள் கட்டி வரும் இந்தப் பாலாடைகளை கலக்கி விடாமல் ஓரத்தில் ஒதுக்கி தனியாக எடுத்துக் கொண்டே வர வேண்டும்.
இப்பொழுது சிறிதளவு குங்குமப் பூவினை இதனுடன் சேர்க்க வேண்டும்.
தனியாக எடுத்து வைத்த பாலாடையையும் இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற நட்ஸ்களை பொடி பொடியாக நறுக்கி தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வறுத்து எடுத்த நட்ஸ்களை பாலுடன் சேர்க்கவும்.
நன்றாக கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும். ஆறிய பின் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறினால் சுவையான குளுகுளு பாசந்தி தயார்.
இதில் சிலர் கொழுப்பு ஊட்டப்பட்ட பால் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்தும் செய்வர்.