தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது பள்ளிபாளையம் சிக்கன் ஆகும். அதிக மசாலாக்கள் இல்லாமல் அதே சமயம் காரசாரமான சிக்கன் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த கொங்கு நாட்டு ஸ்பெஷலான பள்ளிபாளையம் சிக்கனை முயற்சித்து பார்க்கலாம்.
இதனை செய்வதற்கு அதிக மசாலாக்களோ, இதர பொருட்களோ தேவையில்லை. வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் இவற்றின் சுவையோடு சாப்பிடுபவரை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் இந்த ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன்.
வழக்கமாய் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் சிக்கன் எடுத்தால் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று செய்து அலுத்துப்போனவர்கள் இந்த பள்ளிபாளையம் சிக்கனை கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம். பூண்டு ரசத்துடன் இந்த பள்ளிப்பாளையம் சிக்கனை சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும்.
காரசாரமான உணவு என்றாலே பலருக்கும் ஆந்திரா தான் நினைவு வரும் ஆனால் ஆந்திராவின் காரத்தையே தோற்கடிக்கும் அளவிற்கு தமிழகத்திலும் சில பிரபலமான உணவுகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த பள்ளிபாளையம் சிக்கன். வாருங்கள் இந்த ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் செய்முறையை பார்க்கலாம்.
பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல் உணவான மட்டன் கீமா வடை செய்வது எப்படி?
பள்ளிபாளையம் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன் – ஒரு கிலோ
- சின்ன வெங்காயம் – 300 கிராம்
- வர மிளகாய் – 15 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்
- இஞ்சி – 5 சிறிய துண்டு
- பூண்டு – 13 பல்
- பச்சை மிளகாய் – ஒன்று
- சோம்பு – ஒரு ஸ்பூன்
- கடுகு – ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய் – நான்கு மேஜை கரண்டி
- கொத்தமல்லி தழை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- தேங்காய் பத்தை – இரண்டு
பள்ளிபாளையம் சிக்கன் செய்யும் முறை:
சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து வைத்து விட வேண்டும்.
வர மிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிடலாம். அனைத்து விதைகளையும் நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஓரளவு நீக்கினாலே போதுமானது.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இதை பேஸ்ட் போல் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை ஓரளவு அரைத்தாலே போதும்.
இப்பொழுது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு சேர்க்கவும்.
சோம்பு மற்றும் கடுகு பொரிந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த வர மிளகாயை இதனுடன் சேர்க்கவும் மிளகாயை கருக்கி விடக் கூடாது.
இப்பொழுது வெங்காயம் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு எண்ணெயில் வதக்க வேண்டும்.
வெங்காயம் நிறம் மாறியதும் ஏற்கனவே பிசைந்து வைத்த சிக்கனை இதனுடன் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.
சிக்கன் வதங்கியதும் தண்ணீரை அதிகம் ஊற்றாமல் கொஞ்சமாய் தெளிக்க வேண்டும் சிக்கன் தண்ணீர் விடும் அதனால் அதிக தண்ணீர் தேவையில்லை.
சிக்கனை நன்கு எண்ணெயில் வதக்கிய பின்பு மூடி போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
மிளகாயில் உள்ள நிறம் அனைத்தும் இப்பொழுது சிக்கனில் இறங்கி இருக்கும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வெந்த சிக்கனுடன் சேர்க்கவும்.
இப்பொழுது இவை அனைத்தையும் ஒன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் தயார்.