தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தன்னார்வ இளைஞர்கள் நேரடியாக களமிறங்கி நடத்தியதாக கூறப்படும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகள், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வின்படி, தமிழக வெற்றி கழகம் 98 இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடிக்கும் என்றும், ஆளுங்கட்சியான திமுக 70 இடங்களையும், அதிமுக 65 இடங்களையும் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காத சூழலில், தமிழகம் ஒரு ‘தொங்கு சட்டமன்றத்தை’ நோக்கி நகர்வது போன்ற பிம்பத்தை இந்த கணிப்புகள் காட்டுகின்றன.
நீண்ட காலத்திற்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு மூன்றாவது சக்தி இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இதுவே முதல் முறை என்பதால், இது மற்ற இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய சூழலில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை யாரிடமும் இல்லாத பட்சத்தில், திரைக்கு பின்னால் அரசியல் பேரங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிறிய கட்சிகள் கிங் மேக்கர்களாக உருவெடுக்கக்கூடும். அதே சமயம், எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான கட்சி தாவல் முயற்சிகளும், குதிரை பேரங்களும் அரங்கேறக்கூடும் என்ற அச்சம் நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. தமிழக மக்கள் ஒரு நிலையான ஆட்சியை விரும்புவார்களா அல்லது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒரு புதிய கூட்டணியை பார்ப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இந்த கணிப்புகளின்படி தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்தால், அவர்களது மொத்த இடங்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்து, மிக எளிதாக ஆட்சியமைக்க முடியும். கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும், திமுகவை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இவ்விரு கட்சிகளும் கைகோர்க்க வாய்ப்புள்ளதா என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது. ஏற்கனவே பல தேர்தல்களில் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கள் எழுந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை அது இன்னும் சாத்தியமாகவில்லை. ஒருவேளை இத்தகைய சூழல் ஏற்பட்டால், அது தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிசோதனை முயற்சியாக அமையும்.
இருப்பினும், தவெக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் பட்சத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மிகப்பெரிய சிக்கல் எழக்கூடும். ஐம்பது ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தனது அரசியல் அனுபவத்தையும் சீனியாரிட்டையும் விட்டுக்கொடுத்து, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று. அதேபோல், “மாற்றம்” என்ற முழக்கத்தோடு வரும் விஜய், துணை முதல்வர் பதவியையோ அல்லது ஆட்சியின் பங்கையோ மட்டும் ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுப்பாரா என்பதும் கேள்விக்குறியே. அதிகார பகிர்வு மற்றும் அதிகார போட்டி ஆகியவையே இத்தகைய கூட்டணிகளின் நிலைத்தன்மையை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும்.
இறுதியாக, இத்தகைய கருத்துக்கணிப்புகள் இளைஞர்களின் மனவோட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும், உண்மையான தேர்தல் முடிவுகள் மக்களின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும். தொங்கு சட்டமன்றம் உருவானால் அது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களில் முடக்கத்தை ஏற்படுத்துமோ அல்லது ஒரு ஆரோக்கியமான விவாத அரசியலை உருவாக்குமோ என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எது எப்படியோ, 2026 தேர்தல் களம் என்பது வெறும் வாக்குப்பதிவுக்கான இடமாக மட்டுமின்றி, தமிழகத்தின் அடுத்த 25 ஆண்டுகால அரசியல் போக்கை தீர்மானிக்கும் ஒரு போர்க்களமாகவே அமையப்போகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
