உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான X வலைதளம் நேற்று முன்தினம் திடீரென முடங்கியது. மூன்று முறை, சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை முடங்கியதால், அதன் பயனாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
மேலும், எலான் மஸ்க் அவர்கள் இது குறித்து தெரிவித்த போது, ஏதோ ஒரு குழு அல்லது ஒரு நாடு தனது X பக்கத்தை முடக்கியுள்ளதாகவும், தன்னை குறிவைத்து தாக்கியதாகவும் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் என்பவர் X பக்கத்தை ஹேக் செய்த குழுவை கண்டுபிடித்துள்ளார்.
முதலில், அவர் ஹேக்கிங் குழுவில் சேர்ந்த ஒருவரை டெலிகிராமில் கண்டுபிடித்ததாகவும், அவரது பக்கத்தை ஆய்வு செய்து பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, ஒரு மாணவர் தான் X பக்கத்தை ஹேக் செய்தார் என்பதைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில், அந்த மாணவர் தனியாக இதைச் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கிங் குழு அவருக்கு உதவி செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் அரபு உலகத்தின் நலனுக்காக இந்த ஹேக்கிங் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இவரது கண்டுபிடிப்பை X நிறுவனம் இதுவரை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், ராபர்ட் விரைவில் எலான் மஸ்க் அவர்களை சந்திக்க இருப்பதாகவும், இதற்காக அவர் வாஷிங்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் அவர்களை நேரில் சந்தித்து, தனது கண்டுபிடிப்பின் முழு ஆதாரங்களையும் அவர் வழங்குவார் என்றும், அதன் பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
