சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, தனது பெற்றோர் வாங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாகவும், அதன் மதிப்பு தற்போது லட்சக்கணக்கில் இருப்பது அறிந்து தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தையில் தற்போது ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த 20-30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அளவுக்கு பெரிய அளவில் பங்குச்சந்தை பிரபலமாகவில்லை. ஆனால் அதே நேரத்தில், வாழ்க்கையில் சுதாரித்த சிலர் பங்குச்சந்தையில் அப்போதே முதலீடு செய்து வைத்திருந்தனர்.
அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரதன் திலோன் என்பவர், தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, தனது பெற்றோர் வாங்கி வைத்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பழைய பங்குகளுக்கான ஆவணத்தை கண்டுபிடித்தார். வெறும் 10 ரூபாய் மதிப்பிலான 30 பங்குகளை கடந்த 1988 ஆம் ஆண்டு வாங்கிய நிலையில், அந்த பங்குகளின் மதிப்பு தற்போது 11 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
10 ரூபாய்க்கு விலையில் 30 பங்குகள் வாங்கப்பட்டதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சமூக வலைதளத்தில் அந்த ஆவணத்தின் புகைப்படத்தை பதிவு செய்து, “பங்குச்சந்தை குறித்து எனக்கு பெரிய அளவில் தெரியாது. எனவே, இதை என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என மக்களிடம் ஆலோசனை கேட்டார்.
இந்த பதிவு சுமார் மூன்று மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பலர் இதற்கு தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் இந்த பங்கு விலையை ஆய்வு செய்து, போனஸ் மற்றும் பிற விஷயங்களை கணக்கில் கொண்டு 11 முதல் 12 லட்சம் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். வெறும் 300 ரூபாய்க்கு வாங்கிய பங்கு இன்று 11-12 லட்சம் வரை விலை போக இருப்பதை பார்த்து திலோன் மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும் சிலர் நகைச்சுவையாக, “உங்கள் வீட்டை இன்னும் நன்றாக தேடிப் பாருங்கள், ஏதாவது இன்னும் சில பங்குகள் கிடைக்கலாம்” என்று கூறியுள்ளனர்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.