கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் இறுதிப் போட்டிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவின் வினேஷ் போகட், தற்போது கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவதற்காக இறுதி போட்டியில் கலந்து கொள்ள இருந்த இந்தியாவின் வினேஷ் போகட், 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவர் அரசியலில் ஈடுபட்டார். ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, மல்யுத்த வீரர் சோம்வீர் ராதே என்பவரை திருமணம் செய்து கொண்ட வினேஷ், தற்போது கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், குழந்தையின் கால் தடமும், இதய வடிவ எமோஜிகள் சேர்க்கப்பட்டிருந்ததால், அவர்கள் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து, மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள், வினேஷ் போகட்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.