இன்றைய வேகமான உலகத்தில், நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதை பலர் உணர்வதில்லை. இன்று உலக தூக்கம் தினத்தை கொண்டாடும் நிலையில் தூக்கம் குறித்து சிலவற்றை பார்ப்போம்.
“நல்ல தூக்கம் என்பது வெறும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது மட்டுமல்ல. இது மனநிலை மேம்பாடு, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, நீண்டகால நோய்களின் ஆபத்துக்களை குறைப்பது தொடர்புடையது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
1. ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய உடல் ஒரு சரியான நேர அட்டவணையில் நன்றாக செயல்படுகிறது. “தினமும் ஒரே நேரத்தில் படுக்க செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துவது உடலின் இயற்கையான காலச்சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது, இது தூங்கவும், இயல்பாக விழிக்கவும் எளிதாக செய்கிறது.
2. படுக்க செல்லும் முன் மனதை அமைதியாக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வது முக்கியம். “புத்தகம் படித்தல், ஆழ்ந்த மூச்சு விடுதல், தியானம், அல்லது வெந்நீரில் குளிப்பது போன்ற செயல்கள் உடலுக்கு ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று சிக்னல் அனுப்பும்.
3. உங்கள் படுக்கையறை சூழ்நிலை மிதமான வெப்ப நிலையில் இருக்க வேண்டும். அதாவது 18-22°C இருக்க வேண்டும். இருட்டாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். ஒரு வசதியான மெத்தை மற்றும் சுத்தமான படுக்கை இருக்க வேண்டும்.
4. செல்போன்கள், டேப்லெட்கள், மற்றும் கணினிகள் வெளிப்படுத்தும் நீல ஒளி தூக்க ஹார்மோனான மெலட்டோனினை அழுத்தம் செய்யும். எனவே படுக்க செல்லும் முன்பு குறைந்தபட்சம் 60-90 நிமிடங்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
5. மாலையில் நிகோட்டின் மற்றும் மது போன்றவற்றை தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் அவை ஆழ்ந்த தூக்கத்தை தாமதப்படுத்தும். மேலும், “தூங்குவதற்கு அருகில் அதிகமாக அல்லது காரமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
6. நாள் தோறும் 30-45 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங், அல்லது யோகா போன்ற மிதமான உடற்பயிற்சிகள் ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்த உதவும். ஆனால், “தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம்.
7. மன அழுத்தமும் அதிக சிந்தனையும் தூக்கமின்மைக்கு முக்கிய காரணங்கள்.
“தியானம், எழுதுதல், ஆழ்ந்த மூச்சு பயிற்சி போன்றவை தூங்குவதற்கு முன் மனதை அமைதியாக்க உதவும்.
8. பகலில் 20-30 நிமிடங்களுக்குள் தூங்கினால் பிரச்சனையில்லை. ஆனால், நீண்ட நேரம் பகலில் தூங்குவது அல்லது மாலையில் தூங்குவது இரவு தூக்கத்துக்கு இடையூறாக இருக்கலாம். இரவில் தூங்க பிரச்சனை இருந்தால், பகல் உறக்கம் முற்றிலும் தவிர்ப்பது நல்லது
இந்த வழிமுறைகளை பின்பற்றியும், தூக்கம் சரியாக வரவில்லை என்றால், ஒரு மருத்துவ நிபுணரை கண்டிப்பாக அணுக வேண்டும். நல்ல தூக்கம் இருந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் தானாகவே மறைந்துவிடும்.