கர்நாடகாவில் ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து, பின்னர் தடயங்களை மறைப்பதற்காக உடலை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் எடுத்து சென்று வீசியிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தும்கூரு மாவட்டம், திப்தூர் தாலுகாவில் உள்ள கடசெட்டஹள்ளி கிராமத்தில் 50 வயதான சங்கரமூர்த்தி என்பவர் ஒரு பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. சங்கரமூர்த்தியின் மனைவி சுமங்களா, திப்தூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், கரடலுசந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜு என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.
தங்களது உறவுக்கு சங்கரமூர்த்தி இடையூறாக இருப்பதாக எண்ணிய சுமங்களாவும், நாகராஜுவும் அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
குற்றம் நடந்த அன்று, சுமங்களா தனது கணவர் கண்களில் மிளகாய் தூளை தூவி, பின்னர் ஒரு கம்பால் சரமாரியாக தாக்கியிருக்கிறார். அதன் பிறகு, அவர் தனது கணவரின் கழுத்தில் காலை வைத்து கொடூரமாக கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைக்கு பிறகு, உடலை ஒரு கோணிப்பையில் கட்டி, சுமார் 30 கிலோமீட்டர் தூரம் எடுத்து சென்றுள்ளனர். பின்னர், துரவேகெரே தாலுகாவில் உள்ள தண்டனிசிவாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணையில் உள்ள கிணற்றில் உடலை வீசி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சங்கரமூர்த்தி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால், காவல்துறையினர் நடத்திய தேடுதல் விசாரணையில், சங்கரமூர்த்தியின் படுக்கையில் மிளகாய் தூள் தடயங்களும், போராட்டம் நடந்ததற்கான அறிகுறிகளும் தென்பட்டன. இது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுமங்களாவை தீவிரமாக விசாரித்தபோது, அவரது மொபைல் அழைப்பு விவர பதிவுகளையும் ஆய்வு செய்தபோது, இந்த கொடூர கொலை சதி வெளிவந்துள்ளது. இறுதியில், சுமங்களா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தற்போது, நோனவினகெரே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கள்ளக்காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக கணவரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல சமூக வலைத்தள பயனர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒருவர் ‘கள்ளக்காதலனே கண்கண்ட தெய்வம்’ என்று நினைத்து கணவரை கொன்றுவிட்டார்போல’ என பதிவு செய்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
