230 தொகுதிகள் கூட ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.. தவெக ஆதரவாளரின் பதிவு.. ஓவர் கான்ஃபிடன்ஸா? இல்லை காமெடி பண்ணுகிறாரா? அப்ப ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சீமான் மட்டும் தான் ஜெயிப்பாங்களா? ஒரு நியாயம் வேண்டாமய்யா.. நெட்டிசன்கள் கிண்டல்

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய நகர்வுகளில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க தயாராகி வரும் வேளையில்,…

vijay revolution

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய நகர்வுகளில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க தயாராகி வரும் வேளையில், அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்திலுள்ள மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தவெக 230 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெறும் என்று அந்த ஆதரவாளர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானது முதலே, இது அதீத நம்பிக்கையா அல்லது அரசியல் அறியாமையா என்ற கேள்விகளை முன்வைத்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த 230 தொகுதிகள் வெற்றி என்ற இலக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. ஒரு புதிய கட்சி களத்திற்கு வரும்போது உற்சாகமாக இருப்பது இயல்புதான் என்றாலும், தமிழ்நாட்டின் பலமான அரசியல் அடித்தளம் கொண்ட திராவிட கட்சிகளையும், வளர்ந்து வரும் மற்ற கட்சிகளையும் புறந்தள்ளிவிட்டு இவ்வளவு பெரிய வெற்றியை சாத்தியம் என கூறுவது சாத்தியமற்றது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இவர் சொல்வதை பார்த்தால் இந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெறுவார்களா? என எண்ண தோன்றுகிறது.

ஆனால் அதே நேரத்தில் 1991 தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 7 தொகுதிகளிலும் பாமக மற்றும் சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல் 1996 தேர்தலில் திமுக கூட்டணி 221 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஒருமித்த அலை வீசினால் இத்தகைய ஒருதலைப்பட்சமான முடிவுகள் அரிதாகவே கிடைக்கும் என்றாலும், தற்போதுள்ள மும்முனை போட்டியில் 230 தொகுதிகளை ஒரு புதிய கட்சி அள்ளும் என்று கூறுவது “ஓவர் கான்ஃபிடன்ஸ்” என பலரால் விமர்சிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் இந்த பதிவிற்கு எதிராக பகிரப்படும் மீம்கள் மற்றும் கமெண்ட்கள் அனல் பறக்கின்றன. “ஒரு நியாயம் வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், மற்ற அரசியல் தலைவர்களின் உழைப்பையும் வாக்கு வங்கியையும் இவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிடுவது அரசியல் முதிர்ச்சியின்மை என்று சாடுகின்றனர்.

2026 தேர்தல் என்பது பலமான கட்சிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும் என்பது உண்மை தான் என்றாலும் இப்படி ஒரே கட்சிக்கு 230 தொகுதிகள் செல்வது என்பது சாத்தியமற்றது என்று அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர்.