மகளிரை தொழில் முனைவோராக ஊக்குவிக்க, ரூ. 10,000 முன்பணத்துடன் கூடிய ‘சுய தொழில் திட்டத்தை’ அமல்படுத்தி பீகாரில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், அதற்கு முன்பணமாக ரூ. 10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முன்பணம் வாங்கியவர்கள் தொழில் தொடங்க தவறினாலும், அந்த ரூ. 10,000 தொகையை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் இந்த ரூ. 10,000 பணம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதே பீகாரில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் இந்த வெற்றிகரமான ஃபார்முலாவை தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுத்த திட்டமிடலாம் என பத்திரிகையாளர் மணி சமீபத்திய பேட்டி ஒன்றில் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, மகளிர் உரிமை தொகையான மாதம் ரூ. 1000 திட்டத்தை, திமுக ஆட்சிக்கு வந்த பின் 27 மாதங்கள் கழித்தே கொண்டுவந்தது. எனவே, அந்த 27 மாத பாக்கியை இரண்டு தவணைகளாக கொடுப்போம் என்று திமுக ஒருவேளை அறிவிக்கலாம் என்றும், முதல் தவணையாக ரூ. 10,000 தொகையை அனைத்து மகளிருக்கும் ஒரே நேரத்தில் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதாக அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கணித்துள்ளார்.
பீகாரில் பாஜக தொழில் தொடங்குவதற்கான முன்பணமாக ரூ. 10,000 வழங்கியது. ஆனால், தமிழகத்தில் திமுகவோ, ‘தொழில் தொடங்குவதற்கு வழங்குவதற்கு பதிலாக, மாதம் ரூ. 1000 வழங்க வேண்டிய வாக்குறுதிப் பாக்கி தொகையைக் கொடுக்க போகிறோம்’ என்று அறிவிக்கும் உத்தியை கையாள வாய்ப்புள்ளதாக மணிதெரிவித்துள்ளார். ஒருவேளை திமுக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால், பாஜக கொடுத்ததையே நியாயப்படுத்தியவர்கள், திமுக கொடுக்கும்போது அதையும் சேர்த்து நியாயப்படுத்துவார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் இந்த வியூகம், வெற்றிபெற்ற பீகார் ஃபார்முலா என்பதால் இது மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘ஃபார்முலா’ மட்டும் தமிழ்நாட்டில் சரியாக செயல்பட்டால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பெண்களின் வாக்குகளும் திமுக பக்கம் சென்றுவிடும் என்ற அச்சம் மற்ற கட்சிகள் மத்தியில் நிலவுகிறது. மகளிரின் வாக்குகள் ஒரு பக்கம் சாய்ந்தால், அது தேர்தல் முடிவுகளில் மிகப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
திமுக இத்தகையதொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டால், அதனை எப்படி சமாளிப்பது என்று எதிர்க்கட்சிகள் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திமுகவின் இந்த திட்டத்துக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று பல்வேறு விதமான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
அதேபோல, தமிழக அரசியல் களத்தில் புதிதாக நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் திமுகவின் இந்த சாத்தியமான அறிவிப்பு குறித்த தீவிரமான விவாதங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய இதுபோன்ற பெரிய அளவிலான நிதி சலுகைகள் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்டால், அது தங்களது புதிய கட்சியின் அரசியல் வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அவர்கள் சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
