கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் நடந்த விபத்து காரணமாக தலையில் காயம் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடங்களாக உயிருக்கு போராடி வருகிறார் என கூறப்படுகிறது.
அவருக்காக போடப்பட்டிருந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ரூ. 6 லட்சம் முடிந்தவுடன், தன்னால் இனியும் செலவு செய்ய முடியாது என கூறி கணவர் கைவிட்டார். மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு கூட வரவில்லை என்றும், அவர் வேறு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு வருடங்களாக மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணுக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்து கவனித்து வந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளது. இன்சூரன்ஸ் தொகை கடந்துவிட்ட நிலையில், மருத்துவமனைச் செலவுகள் மட்டும் ஒரு கோடியை நெருங்கிவிட்டதாகவும், இனி மேலும் தங்களால் அந்த பெண்ணை பராமரிக்க முடியாது என்றும், இதற்கு நீதிமன்றம் தீர்வு காண வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவரை அழைத்து விசாரித்தபோது, தனது மனைவிக்கு இடுப்பு கீழ் உள்ள எந்த உறுப்பும் செயல்படவில்லை; எனவே தன்னால் அவரைப் பராமரிக்க முடியாது எனக் கூறினார்.
இதனை அடுத்து, குடும்ப விஷயங்களில் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள், இதற்கு அரசு தீர்வு காண முடியுமா, இலவச ஆதரவு மையங்களில் அந்த பெண்ணைப் பராமரிக்க முடியுமா என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்காக வழக்கை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் கணவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா? மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவாரா? கணவருக்கு கண்டனம் அல்லது தண்டனை கிடைக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..