கடந்த சில மணி நேரங்களாக உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதாகவும், இதனால் ஏராளமான பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலைதளங்கள் மற்றும் செயலிகளுக்கான பிரச்சனைகளை கண்காணிக்கும் Down Detector என்ற இணையதளம் வாட்ஸ் அப் சேவை தடை ஏற்பட்டுள்ளதாகக் காட்டியுள்ளது. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லண்டனைச் சேர்ந்தவர்கள் என்றும், இங்கிலாந்தின் பல பகுதிகளில், குறிப்பாக லண்டன், மான்செஸ்டர், கிளாஸ்கோ போன்ற நகரங்களில் பெரிய அளவில் வாட்ஸ் அப் சேவை தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் முதல் வாட்ஸ் அப் சேவை பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும், Meta நிறுவனம் இதுகுறித்து ஆய்வு செய்து, தொழில்நுட்ப உதவியாளர்களின் உதவியுடன் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“சில பயனர்களுக்கு வாட்ஸ் அப் செயலியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம். விரைவாக இதை சரி செய்ய முயற்சிக்கிறோம்,” என்று Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.