மெட்டா நிறுவனத்தின் பிரபலமான வாட்ஸ்அப் சேவையை தங்கள் ஊழியர்களின் அனைத்து சாதனங்களிலிருந்தும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தடை செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்கான காரணமாக, “பயனர்களின் தரவு பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவுகள் குறியாக்கப்படாமல் இருப்பது, மற்றும் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்” ஆகியவற்றை சைபர் பாதுகாப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாடு பயனர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கருதுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபையின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட இந்த சுற்றறிக்கையில், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், அமேசானின் விக்ர், சிக்னல், மற்றும் ஆப்பிளின் ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ்டைம் போன்ற மாற்று மெசேஜிங் செயலிகளை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
இந்த நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக ஒரு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். வாட்ஸ்அப், அங்கீகரிக்கப்பட்ட மற்ற செயலிகளை விட உயர் பாதுகாப்பு தரங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேலிய உளவு மென்பொருள் நிறுவனமான பாராகன் சொல்யூஷன்ஸ், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பல வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்ததாக வாட்ஸ்அப் தரப்பில் இருந்து ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு பிரச்சினைகளைக் காரணம் காட்டி, டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை நாடாளுமன்ற ஊழியர்களின் சாதனங்களிலிருந்து பிரதிநிதிகள் சபை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திக்கு நெட்டிசன்கள் ‘காட்டாற்று வெள்ளத்தை தடை போட முடியுமா?’ என்றும், டிரம்புக்கும் வாட்ஸ் அப் ஓனர் மார்க் ஆகிய இருவருக்கும் கருத்துவேறுபாடு என்றும், அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்து வருகின்றனர்.