தற்போது ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரு மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு போன்களில் பயன்படுத்தலாம் என மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்திருப்பது பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் மெசஞ்சர் என்ற சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் வாட்ஸ்அப் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட போன்களில் பயன்படுத்தும் புதிய அம்சம் தற்போது அறிமுகம் ஆகி உள்ளது.
உலக அளவில் பல மெசஞ்சர்கள் இருந்தாலும் வாட்ஸ்அப் மெசேன்ஜர் சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி போட்டோ வீடியோ ஆடியோ மற்றும் டாக்குமெண்ட்களையும் அனுப்பலாம் என்பதும் பள்ளி மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தேவையான அப்டேட்களை அவ்வப்போது செய்து வரும் மெட்டா நிறுவனம் தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி லேப்டாப் போன்ற சாதனங்களை மட்டும் ஒரே கணக்கை இணைக்க முடியும் என்ற நிலையில் தற்போது மற்ற போன்களில் வாட்ஸ்அப் கணக்கை ஏற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் அப் செயலியில் லிங்க் டிவைஸ் என்ற பிரிவுக்கு சென்று பயனர்கள் தங்கள் கணக்கை மற்ற ஃபோன்களுடன் லிங்க் செய்து கொள்ளலாம். வரும் நாட்களில் இந்த அம்சம் படிப்படியாக உலக அளவில் பயன்பாட்டிற்கு வரும் என மெட்டா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல போன்களில் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து வாட்ஸ்அப் பயனாளர்கள் இதற்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.