ராகுல் காந்தியின் “H-Files” ஹரியானா தேர்தல் மோசடி குறித்த பகிரங்க குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அளவுக்கு, உண்மை சோதனையில் தாக்கு பிடிக்கவில்லை என்பதே நிதர்சனம். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர், தன் தோல்வியை மறைக்க ‘தவறான தகவல் பிரச்சாரம்’ என்ற கூரிய ஆயுதத்தை கையிலெடுத்தாரா என்ற கேள்வியை இந்த கூற்றுகள் எழுப்பியுள்ளன.
வெற்றி பெற்ற தொகுதியிலேயே ‘மோசடி’ குற்றச்சாட்டு
ராகுல் காந்தியின் மிக முக்கியமான குற்றச்சாட்டு, முலானா தொகுதிக்குட்பட்ட தக்கோலா கிராமத்தில் ஒரே வாக்காளரின் பெயர் 220 முறை இடம்பெற்றிருந்தது என்பதாகும். வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்ததால், தேர்தல் ஆணையம் சாவடியைப் பிரித்து புதிய எல்லைகளை அமைத்ததுதான் உண்மை. ஆனால், இதை ‘நகல்’ என்று காந்தி திரித்து கூறினார்.
இதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த தொகுதியில் மோசடி நடந்ததாக அவர் குற்றம் சாட்டினாரோ, அதே முலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றது! தனக்கு சாதகமாக முடிந்த தேர்தல் முடிவுகளை கொண்டே, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகித்தது ஏன் என்ற கேள்வி, அவரது வாதத்தின் தர்க்கத்தையே சிதைக்கிறது.
தேவைக்கேற்ப மாறும் ‘கருத்துக் கணிப்பு’ நம்பிக்கை
ராகுல் காந்தியின் இரண்டாவது குற்றச்சாட்டு கருத்து கணிப்புகள் மீது இருந்தது. அவருக்கு சாதகமாக இருந்த சில கருத்து கணிப்புகளை மட்டும் மேற்கோள் காட்டி, இறுதி முடிவுகள் மோசடியானவை என்றார்.
பல ஆண்டுகளாக, தனக்கு சாதகமற்ற கருத்து கணிப்புகளை “மோடியின் பிரச்சாரம்” என்று விமர்சித்தவர், இப்போது ஒரு சில சாதகமான புள்ளிவிவரங்களுக்காக அவற்றை ‘சத்திய வாக்கு’ போல் சித்தரிப்பது, வசதிக்கேற்ப தகவல்களை தேர்ந்தெடுக்கும் இரட்டை நிலையை வெளிப்படுத்துகிறது.
அஞ்சல் வாக்குகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்
ராகுல் காந்தியின் மூன்றாவது குற்றச்சாட்டு, அஞ்சல் வாக்குகளை பற்றியது. அஞ்சல் வாக்குகளில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தும் இறுதி முடிவில் தோல்வியடைந்ததாக கூறி, மோசடி நடந்ததாக அவர் மறைமுகமாக தெரிவித்தார்.
ஹரியானாவில் அஞ்சல் வாக்குகள் மொத்த வாக்குகளில் 0.57% மட்டுமே. ஒரு மிகச்சிறிய சதவீதத்தை வைத்து, ஒட்டுமொத்த தேர்தல் மோசடி நடந்ததாக கூறுவது அரசியல் ரீதியாகவும், கணித ரீதியாகவும் நேர்மையற்ற செயலாகும்.
ராகுல் காந்தியின் கூற்று ஆராயப்பட்டபோது, ஜூலானா, ஹதின், நாங்கல் சௌத்ரி மற்றும் ஆடம்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜகதான் அஞ்சல் வாக்குகளில் முன்னணியில் இருந்தும் இறுதி முடிவில் தோல்வியடைந்தது தெரிய வந்தது. அதாவது, அவர் மோசடிக்கு ஆதாரமாக காட்டியவை பாஜகவுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.
பிரேசில் மாடல் குழப்பம்: கற்பனைக் கதை
ராகுல் காந்தி முன்வைத்த மிகவும் விநோதமான ஆதாரம், ஹரியானா வாக்காளர் அட்டைகளில் ஒரு பிரேசில் மாடலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது என்பதுதான். பாதிக்கப்பட்ட மாடலான லாரிசா நெரி, “எனக்கும் இந்திய அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஸ்கேம்’ என்று பகிரங்கமாக மறுத்தார். ஒரு வெளிநாட்டவரின் புகைப்படத்தை வைத்து தேர்தல் சதி என்று கட்டுக்கதை புனைந்தது, காங்கிரஸின் நம்பகத்தன்மையை வெகுவாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
4முதல்வர் பேச்சை திரித்து கூறுதல்
ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி “எங்களிடம் அனைத்து ஏற்பாடுகளும் உள்ளன” என்று கூறியதை, ‘வாக்கு திருட்டுக்கான ஏற்பாடு’ என ராகுல் காந்தி திரித்து கூறியதும் அம்பலமானது. சைனி தனித்து ஆட்சி அமைக்க தேவையான கட்சியின் ஏற்பாடுகளை குறிப்பிட்டார் என்பதே முழுமையான வீடியோவில் இருந்து தெரியவந்தது.
ராகுல் காந்தியின் “H-Files” என்பது உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததல்ல. இது, தோல்வியை ஏற்க மறுத்து, வேண்டுமென்றே திரித்து கூறப்பட்ட தகவல்களையும், அரைகுறை உண்மைகளையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் நாடகமே அன்றி வேறில்லை
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
