கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்நறு அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் நகைப்பட்டறையில் வேலை செய்பவர் என்பது தெரியவந்தது.
கோவையில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை விமான நிலையத்தில் பயணிகள் தவிர வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. பயணிகளை கூட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள்.
இதை மீறி நேற்று முன்தினம் மாலையில் விமான நிலையத்தின் உள்ளே தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்தார். அவர் அங்கு நாலாபுறமும் சுற்றித்திரிந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் குமார் ராஜ் பர்தான் தலைமையிலான மத்திய தொழில் பாதுகாப்புபடையினர், அந்த நபரை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி பகுதியை சேர்ந்த தருண் மாலிக்(வயது 39) என்பதும், கோவையில் ஒரு நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.