‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டை

திண்டுக்கல்: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் ‘கூகுள் மேப்’பை நம்பி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். டாக்டர் தம்பதியான பழனிசாமி குடும்பம் நடுகாட்டில் காருடன் சேற்றுக்குள்…

What happened to the doctor couple who went to visit Palani Murugan by relying on Google Maps?

திண்டுக்கல்: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் ‘கூகுள் மேப்’பை நம்பி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். டாக்டர் தம்பதியான பழனிசாமி குடும்பம் நடுகாட்டில் காருடன் சேற்றுக்குள் சிக்கி உள்ளது,. அதிகாலையில் அவதிப்பட்ட அவர்களை தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 27 வயதாகும் பழனிச்சாமி டாக்டர். அவருடைய மனைவி கிருத்திகா (27). இவரும் டாக்டர் ஆவர். இந்த டாக்டர் தம்பதிக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளது. கிருத்திகாவின் தம்பி பாவேந்தர் (25). இவரும் டாக்டர் ஆவார்.

பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு பழனிசாமி, தனது மனைவி, 4 மாத கைக்குழந்தை, மைத்துனருடன் காரில் தர்மபுரியில் இருந்து பழனிக்கு புறப்பட்டார். காரை கிருத்திகாவின் தம்பி பாவேந்தர் ஓட்டினார்.

 

‘கூகுள் மேப்’ உதவியுடன் அவர்கள் தர்மபுரியில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கார் வந்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில், வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்தை கார் கடந்து வந்துள்து, அப்போது நான்கு வழிச்சாலையை தவிர்த்து விட்டு, வலதுபுறத்தில் இணைப்புச்சாலை போல சென்ற மண்பாதையில் திரும்பிச்செல்லுமாறு ‘கூகுள் மேப்’ அறிவுறுத்தியதாம். இதனை நம்பிய பாவேந்தரும் காரை வலப்புறமாக திருப்பி, நான்கு வழிச்சாலையை விட்டு விலகி மண்பாதையில் காரை ஓட்டி சென்று கொண்டுள்ளார். மண்பாதையில் சுமார் 10 மீட்டர் தூரம் கார் சென்றது. கனமழை காரணமாக அந்த பாதை சேறும் சகதியுமாக கிடந்துள்ளது. அதில் சென்ற கார், திடீரென சேற்றில் சிக்கி கொண்டது. இதையடுத்து வந்த வழியாகவே திரும்பிச்சென்றுவிட நினைத்த பாவேந்தர் காரை பின்னோக்கி இயக்கி பார்த்துள்ளார். ஆனால் கார் சேற்றில் முழுமையாக சிக்கி இருந்ததால் பின்னோக்கியும் நகரவில்லை. சக்கரங்கள் மட்டும் சுழன்றபடி இருந்தது.

இதையடுத்து டாக்டர் பழனிச்சாமி கீழே இறங்கி, காரை தள்ளிவிட முயன்றார். ஆனால் அவருடைய கால்களும் சேற்றில் பதிந்ததால் அவரால் காரை தள்ளிவிட முடியவில்லை. இதனால் மீண்டும் காருக்குள் சென்றுவிட்டார். சேற்றில் சிக்கிய காரை எப்படி மீட்பது என்று தெரியாமல் கைக்குழந்தையுடன் டாக்டர் தம்பதியினர் காருக்குள் தவித்தார்கள். அதிகாலை நேரம் என்பதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை.

பின்னர் ஒருவழியாக சென்னை தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தொடர்பு கொண்டு காரில் சேற்றில் சிக்கித் தவிப்பது குறித்து தெரிவித்தார்கள்,. அதன் பின்னர் சென்னையில் இருந்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள்.

 

பின்னர் அவர்கள் சேற்றில் சிக்கிய காரை தள்ளிவிட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னரே டாக்டர் குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர். இதையடுத்து தீயணைப்பு படைவீரர்களுக்கு டாக்டர் தம்பதியினர் நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்கள் பழனிநோக்கி சென்றனர். கூகுள் மேப்பை நம்பி நடுவழியில் டாக்டர் தம்பதியினர் கைக்குழந்தையுடன் தவித்த சம்பவம் திண்டுக்கல் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.