தமிழக அரசியல் களத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்டாக உருவெடுத்துள்ளது ‘தமிழக வெற்றி கழகம்’ மற்றும் அதன் இளைஞர் படையான ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஒரு மாற்று அரசியலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நடிகர் விஜய்யின் தலைமையில் அணிவகுத்துள்ள இந்த இளைஞர் படையின் நோக்கங்கள், அரசியல் பார்வை, மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்பது சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் இணைக்கப்பட்ட, தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் தொண்டர் படை. இவர்கள் அனைவரும் 2008 முதலே விஜய் நற்பணி மன்றம் மற்றும் 2014 முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர்கள். சென்னை வெள்ளத்தின் போது நிவாரண பணிகள், 2017 ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற நிகழ்வுகளில் இவர்கள் இளைஞர் சக்தியாக களமிறங்கிய அனுபவம் கொண்டவர்கள்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தபோது, இந்த இளைஞர்கள் உடனடியாக இணையவில்லை. காரணம், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிடுவாரோ என்ற ஐயம் இவர்களுக்கு இருந்தது. விஜயகாந்த் தனியாக தொடங்கி, பின்னர் கூட்டணி வைத்த அனுபவம் இவர்களது ஐயத்திற்கு காரணமாக அமைந்தது.
விஜய்யின் தொடர்ச்சியான அரசியல் பரப்புரைகள், குறிப்பாக தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் ‘கொள்கை எதிரி’, ‘அரசியல் எதிரி’ என்று அவர் தெளிவாக திமுகவையும் பாஜகவையும் அறிவித்த பின்னரே, இவர் மாற்று அரசியல் செய்வார் என்ற நம்பிக்கையில் சுமார் இரண்டு லட்சம் இளைஞர்கள் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்ற அடையாளத்துடன் கட்சியில் இணைந்துள்ளனர்.
“வெற்றிவேல் விஜயவேல்” என்பது இவர்களது முழக்கமாகும். விஜய் என்றாலே வெற்றி, வெற்றி என்றாலும் வெற்றி என்பதால் இந்த முழக்கத்தை கையிலெடுத்துள்ளனர். தி.மு.க. மற்றும் சில எதிர்க்கட்சிகள் இவர்களைப் ‘தற்குறிகள்’, ‘அணில் குஞ்சுகள்’ என இழிவாக விமர்சிக்கின்றன. இதற்கு, இந்த இளைஞர் படை அளிக்கும் பதில் உறுதியானது: நாங்கள் தற்குறிகள் கிடையாது. நாங்கள் படித்த இளைஞர்கள். படித்த பின்னரே அரசியல் கொள்கைகளில் தெளிவு பெற்றுள்ளோம். எங்களது அரசியல் ஆரோக்கியமான, மக்கள் நலம் சார்ந்த அரசியலாக இருக்கும். எனவே, எங்களது பதிலடி பண்புடன் கூடியதாக, ஆனால் அழுத்தமானதாக இருக்கும்.”
தாங்கள் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், கமல் ரசிகர்கள் என பிரிந்திருக்கவில்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ள நிவாரணம் போன்றவற்றில் ஒற்றுமையாகவே செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். “பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் எங்களது ஒற்றுமையை உடைக்க முடியாது” என அவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கை “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாகும், அதாவது எல்லா உயிர்களும் பிறப்பால் சமம் என்பதே முதன்மையானது. இந்த கொள்கையை நிலைநாட்ட, அவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் ஐந்து கொள்கை ஆளுமைகளை வைத்துள்ளனர்.
முதலாவதாக, வேலு நாச்சியார் அவர்களின் பெண்ணியல் துணிச்சல் மற்றும் பெண்களுக்கு முழுமையான விடுதலையை (இரவு 12 மணிக்கும் பாதுகாப்பாகச் செல்லும் துணிச்சல்) உறுதிப்படுத்துவது. இரண்டாவதாக, பெரியார்அவர்களின் பகுத்தறிவு மற்றும் தமிழர்களின் தன்மான எழுச்சி. மூன்றாவதாக, அஞ்சலை அம்மாள் அவர்களின் விடுதலை வேட்கை மற்றும் அர்ப்பணிப்பு. நான்காவதாக, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் அடிமை இன்மை. இறுதியாக, நீதிக் கட்சி மற்றும் காமராஜர் அவர்களின் கல்வியியல் மற்றும் தொழிலியல் ஆகிய கொள்கைகளை தங்கள் அடித்தளமாக கொண்டுள்ளனர்.
இளைஞர்களின் முதல் கடமை, இந்த கொள்கைகளை உணர்ந்து, உணர்த்தி, பின்பற்றுவதன் மூலம் தங்கள் தலைவரை வெற்றிபெற செய்வதுதான் என்று ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ உறுதியாக தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
