தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது இரண்டாவது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து ஆளும் கட்சியான திமுக உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “காக்கா கூட்டம்”, “நாய் குலைப்பது” போன்ற கடுமையான வார்த்தைகளால் விஜய்யை விமர்சிப்பவர்கள், அவருக்கு கூடும் மக்கள் கூட்டத்தைக் கண்டு பயந்துவிட்டனர் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்துக்கு திமுக அரசு பல்வேறு நிபந்தனைகளையும் தடைகளையும் விதிப்பதாக த.வெ.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர். மற்ற கட்சிகள், குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டங்களுக்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகள், விஜய்க்கு மட்டும் ஏன் விதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி இரவில் 11 மணிக்கு வந்தபோதும், காவல்துறை எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், விஜய்யின் கூட்டங்களுக்கு நேரம் குறிப்பது, ஊர்வலங்களுக்கு தடை விதிப்பது போன்ற செயல்கள் அரசியல் பழிவாங்கல் என விமர்சிக்கப்படுகிறது. இது, விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களை மேலும் ஆவேசப்படுத்தியுள்ளது. விஜய்யின் பேச்சில் வெளிப்படும் ஆக்ரோஷம், இந்த நிபந்தனைகளின் காரணமாகவே அதிகரித்துள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசன், விஜய்யின் கூட்டங்கள் ஓட்டுகளாக மாறாது என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “தனக்குக் கூடிய கூட்டம் ஓட்டுகளாக மாறாததால், கமல்ஹாசன் அந்த அனுபவத்தில் பேசுகிறார்” என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
“த.வெ.க. துண்டுகளை அணிந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள், தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பார்கள்?” என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகள் தான் பதிலளிக்கும் என்றும், இந்த எழுச்சி, தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விஜய்க்கு எதிராக சீமான் போன்ற தலைவர்கள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது, திமுகவின் மறைமுக அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. “திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் சீமான் இப்படிப் பேசுகிறார்” என்ற குற்றச்சாட்டு, அவரது பேச்சுகள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவே பலர் கருதுகின்றனர்.
விஜய் கேட்கும் கேள்விகளுக்கு திமுகவின் முன்னணி தலைவர்களான மு.க.ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பதிலளிக்காமல், மூன்றாம், நான்காம் தர தலைவர்கள் மூலம் பதிலடி கொடுப்பது ஒரு அரசியல் உத்தி என கூறப்படுகிறது. “விஜய், தனக்கு சமமான போட்டியாளர் அல்ல” என்பதை உணர்த்தவே இத்தகைய உத்தி கையாளப்படுவதாகவும், எதிர்காலத்தில் விஜய்யின் வளர்ச்சி கண்டு ஸ்டாலினே நேரடியாக பதிலளிக்கும் நிலை வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் எதிரிகளை ஆபாச பேச்சுகள் மூலம் தாக்குவது திமுகவின் நீண்ட நாள் யுக்தி. இது எம்.ஜி.ஆர், விஜயகாந்த், சீமான் என பலருக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது விஜய்க்கும் எதிராக இத்தகைய தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
“ஆபாசமாக பேசுபவர்களை நீக்கிவிட்டதாக கூறிவிட்டு, பின்னர் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வது ஒரு நாடகம்” என்றும், இத்தகைய பேச்சாளர்கள் தங்கள் பலம் என்றும் திமுக கருதுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது, தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் எதிர்காலப் பயணத்தில், பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் விஜய் கூட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனை விதித்தாலும் கரூர் கூட்டத்தில் திமுகவையும், முதல்வரையும், முதல்வர் குடும்பத்தையும், செந்தில் பாலாஜியையும் விஜய் வச்சு செய்வார் என்றும் அரசியல் விமர்சகர்கள் ஊகிக்கின்றனர். விஜய்யை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது, ஏனெனில் அவரிடமே ஆயிரக்கணக்கான கோடிகள் உள்ளது. அவரை பயமுறுத்தவும் முடியாது, ஏனெனில் அவரது அடுத்தடுத்த கூட்டங்களில் பேசும் பேச்சு அதை தெளிவாக கூறுகிறது. மொத்தத்தில் விஜய்யை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் கடைசி ஆயுதமான ஆபாச பேச்சை திமுக கையில் எடுத்துள்ளது என்ற விமர்சனமும் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
