நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தது முதல், தமிழக அரசியல் களம் அவரை சுற்றிச் சுழல தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு ஒரு வலுவான மாற்று சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில், விஜய்யின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஒரே ஒரு குறிப்பிட்ட வாக்காளர் பிரிவின் மீது குவிந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்: அதுதான் ‘ஜென் Z’ (Gen Z) என்று அழைக்கப்படும் இளைய தலைமுறை வாக்குகள்.
விஜய் கட்சி ஆரம்பித்ததன் பின்னணியிலும், அதன் வியூகத்திலும் இந்த இளைய தலைமுறை வாக்காளர்களே மையமாக உள்ளனர். ‘ஜென் Z’ என்பது சுமார் 18 முதல் 28 வயது வரையிலான இளம் வாக்காளர்களை குறிக்கிறது. சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், தகவல் தொழில்நுட்பத்தில் வலுவாகவும் உள்ள இந்த தலைமுறையினர்தான் விஜய்யின் திரைப்படங்களின் மூல ஆதாரம்.
தமிழகத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ‘ஜென் Z’ மற்றும் இளைய வாக்காளர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதில் விஜய்க்கு இருக்கும் ஏகோபித்த ரசிகர் பலம், இந்த வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும் என்று தவெக உறுதியாக நம்புகிறது.
நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் தமிழக அரசியலில், ஒரு புதிய தலைமைக்கான ஏக்கமும் சலிப்பும் இந்த இளம் வாக்காளர்களிடம் அதிகமாக உள்ளது. விஜய், ‘அரசியல் மாற்றம்’ என்ற கருத்தை முன்னிறுத்தி இந்த நம்பிக்கையை அறுவடை செய்ய நினைக்கிறார்.
இந்த தலைமுறை வாக்காளர்களை நேரடியாக சென்றடைய விஜய் சமூக ஊடகத்தை பயன்படுத்துகிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் எந்த ஊடகம் பேசினாலும் பேசாவிட்டாலும், இளைஞர்கள் மத்தியில் ‘மீம்ஸ்’ மற்றும் ‘ட்ரெண்ட்’கள் மூலம் வேகமாக பரவி, கட்சிக்கு ஒரு இலவச மற்றும் வலிமையான விளம்பரத்தைத் தேடி தருகின்றன.
அரசியல் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, ஒரு தேர்தலில் வெற்றி பெற தேவையான 30-35% வாக்குகளில் கணிசமான பகுதியை இந்த இளைய தலைமுறை வாக்காளர்களிடமிருந்து மட்டுமே விஜய் திரட்டிவிட்டால், அவர் எளிதில் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க முடியும்.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் இருந்தாலும், விஜய்யின் அரசியல் நகர்வுகளை வடிவமைப்பவர்கள் யார் என்பதில் தெளிவான ஒரு பிரிவினை இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகளுக்காகவும், சில எளிய அரசியல் அணுகுமுறைகளுக்காகவும் எதிர்க்கட்சிகளால் ‘காமெடி பீஸ்’ போல விமர்சிக்கப்படலாம். இவர் ரசிகர் மன்றத்தை நீண்டகாலமாக கட்டிக்காத்தவர் என்பதால், அடித்தட்டு ரசிகர்களுடனும், கட்சி தொண்டர்களுடனும் நேரடியாக உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை வைத்திருக்கும் அடிப்படை ஒருங்கிணைப்பாளர் பணியை செய்கிறார். இவருடைய நோக்கம், ரசிகர்களின் விசுவாச வாக்குகளை உறுதிப்படுத்துவதே ஆகும்.
ஆனால், தவெக-வின் வியூகங்களுக்கு பின்னால் இருப்பது, தொழில்முறை அறிவும் அரசியல் நுணுக்கமும் கொண்ட ஆதவ் அர்ஜூனாதான் என்று நம்பப்படுகிறது. அவர் அரசியலிலும், நிர்வாகத்திலும் விஷயம் தெரிந்தவராக கருதப்படுகிறார்.
யார் இவர்?: இவர் பிரபல தொழில் அதிபர் மற்றும் தமிழ்நாட்டுக் கூடைப்பந்து சங்கத்தின் (TNBA) தலைவராகவும் உள்ளார். அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் அனுபவம் உள்ளவர்.
டெல்லியில் உள்ள சில சக்திவாய்ந்த தலைவர்களை அப்பாயின்மெண்ட் இல்லாமல் பார்க்கக்கூடிய ஆதவ் அர்ஜூனா, விஜய்க்கான அரசியல் பாதையை மிகவும் நிதானத்துடனும், தெளிவுடனும் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘ஜென் Z’ வாக்குகளை வெறும் ரசிகர் வாக்குகளாக மட்டுமின்றி, சமூகத்தின் ஒரு விழிப்புணர்வுள்ள பிரிவின் வாக்குகளாக மாற்றுவதற்கான நீண்டகாலத் திட்டங்களை இவர் வகுக்கிறார்.
விஜய்யை வெறும் நடிகராக மட்டுமின்றி, ஆழ்ந்த அரசியல் அறிவுள்ள, நிர்வாகத் திறன் கொண்ட தலைவராக முன்னிறுத்துவதே இவரின் முதன்மை இலக்காக உள்ளது. இவருடைய வழிகாட்டுதலின் கீழ், தவெக கட்சி செயல்பாடுகள் வெறும் ரசிகர் மன்ற செயல்பாடுகளை தாண்டி, ஒரு அரசியல் இயக்கமாக மாற தொடங்கியுள்ளன.
ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் முதிர்ச்சியும், நிர்வாக திறனும் விஜய்யை நிச்சயம் தமிழக அரசியலில் ஒரு “கரை சேர்க்கும்” சக்தி என்றும், தவெக-வின் நீண்டகால இருப்பை இவரே உறுதி செய்வார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.
இளைய தலைமுறை வாக்காளர்கள், பாரம்பரிய வாக்குகளை போல நிலையானவர்கள் அல்ல. அவர்களின் அரசியல் விருப்பங்கள் மிக வேகமாக மாறக்கூடியவை. விஜய்யின் கொள்கை முடிவுகளும், கூட்டணி வியூகங்களும் இந்த தலைமுறையினரை தொடர்ந்து ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
எதிர்வரும் தேர்தல்களில், ஆதவ் அர்ஜூனா போன்ற வியூகவாதிகளின் திட்டமிடலும், விஜய்யின் தனிப்பட்ட கவர்ச்சியும் இணைந்து, ‘ஜென் Z’ வாக்குகளை சரியாக அறுவடை செய்தால், தமிழக வெற்றி கழகம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் சாத்தியமே!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
