தமிழ்நாட்டில் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு, அவரது அரசியல் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் குறித்த வீடியோக்கள் வட இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள சமூக வலைதளத் தாக்கம் கொண்டவர்கள் விஜய்யின் அரசியல் உரைகளைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதும், அதன் சிறப்பம்சங்களை ரீல்ஸ்களாக பதிவிடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. வட இந்தியர்கள் மத்தியில் ஒரு தென் இந்தியத் தலைவரின் வீடியோக்களுக்கு இவ்வளவு பெரிய வியூவ்ஸ் கிடைப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், அவர் மீதான ஈர்ப்பு அங்கு தீவிரமாக வளர்ந்து வருவதை இது காட்டுகிறது.
சாதாரண நடிகராக இருந்த காலத்திலேயே அவருக்கு வட மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அவர் முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு, அவரது செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அங்குள்ள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அன்றாடம் செய்யும் நிகழ்வுகள், அறிவிப்புகள் மற்றும் கட்சி நிர்வாகம் குறித்த தகவல்களை வட இந்திய ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பொதுவாக, மற்ற மாநிலத் தலைவர்களின் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது மட்டுமே கவனிக்கும் போக்கு மாறி, விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு புதிய கலாச்சாரம் அங்கு உருவாகியுள்ளது.
இந்த அரசியல் வளர்ச்சி 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அவர் வெறும் கூட்டணித் தலைவராக மட்டும் இல்லாமல், ஒரு “கிங் மேக்கராக” அல்லது “கிங்காக” உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகப் பேசப்படுகிறது. தவெக-வின் செல்வாக்கு பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பரவி வருவதால், அங்கெல்லாம் தவெக-வைத் தொடங்கக் கோரிக்கைகள் வருவதாக அக்கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் ஒரு அரசியல் கட்சிக்கு இத்தகைய ஆதரவு கிடைப்பது அபூர்வமானது.
காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு, 2029-ல் ராகுல் காந்தியைப் பிரதமராக்கும் திட்டத்தில் விஜய்யின் மக்கள் செல்வாக்கை ஒரு பெரிய பலமாகப் பார்க்கிறார்கள். மோடிக்கு இணையாக அல்லது அவரை எதிர்க்கும் வலிமை கொண்ட ஒரு பிம்பமாக விஜய் வளர்ந்து வருவது தேசிய அரசியலில் கவனிக்கத்தக்க மாற்றமாகும். தமிழ்நாட்டிலிருந்து தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் பலருக்கு அந்தந்த மாநிலங்களில் வலுவான கட்சி அமைப்பு இருந்ததே ஒரு அடையாளமாக இருந்தது; ஆனால் விஜய்க்கு எந்தக் கலாச்சாரப் பின்புலமும் இல்லாத மாநிலங்களிலும் கிடைத்துள்ள வரவேற்பு தனித்துவமானது.
கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் அவருக்குப் பல ஆண்டுகளாகவே பெரும் வரவேற்பு இருப்பது தெரிந்த ஒன்றே, ஆனால் இப்போது பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலங்களிலும் அந்த கிரேஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. தவெக-வின் இந்தத் திடீர் அரசியல் எழுச்சி, இந்திய அரசியலில் ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை என்று பல ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு நடிகராகப் பெரிய புகழ் பெற்ற அவர், இப்போது அரசியல்வாதியாக ஒரு தேசிய பிம்பமாக மாறுவதற்கான அத்தனை அறிகுறிகளும் தற்போது தென்படுகின்றன.
எதிர்காலத்தில், குறிப்பாக 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தவெக எந்த மாதிரியான ரோலை பிளே செய்யப்போகிறது என்பதும், அவர் பிரதமர் கனவை நோக்கி நகர்வாரா என்பதும் பெரும் விவாதமாகியுள்ளது. இது வெறும் கற்பனையாக இல்லாமல், சமூக வலைதளங்களில் அவருக்குக் கிடைக்கும் ஆதரவும், வட மாநிலங்களில் அவர் மீது நிலவும் எதிர்பார்ப்பும் அதனை உண்மையான அரசியல் சாத்தியமாக மாற்றியிருக்கிறது. எது எப்படியிருப்பினும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய அரசியலின் அச்சாணியாக மாறுவதற்கான சூழல் கனிந்து வருகிறது என்பதே தற்போதைய அரசியல் நிலவரம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
