நடிகர் விஜய்யின் சமீபத்திய திருவாரூர் பயணம், தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும், கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரில், விஜய்யின் பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டம், இது வெறும் ரசிகர் கூட்டம் அல்ல, மாறாக மாற்றத்தை விரும்பும் மக்களின் எழுச்சி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது திராவிட கட்சிகளுக்கு, குறிப்பாக ஆளும் திமுகவுக்கு ஒரு நேரடி சவாலாக அமைந்துள்ளது.
திருவாரூர் தேருக்குக்கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்குமா என்று ஆச்சரியப்படும் வகையில், விஜய்யின் பிரசார கூட்டத்தில் மக்கள் திரண்டது, மக்களின் மனநிலை மாறி வருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறி. ஊடகங்கள் இதனை டி.ஆர்.பி.க்கான ஒரு நிகழ்வாக மட்டும் பார்க்கவில்லை. இந்த மாற்றம், பாரம்பரிய அரசியலில் இருந்து வேறுபட்டு, ஒரு புதிய தலைமைக்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
திருச்சியில் தொடங்கி திருவாரூர் வரை, விஜய் தனது பேச்சில் திமுக அரசின் மீது நேரடி தாக்குதலை தொடுத்து வருகிறார். “வெளிநாட்டு முதலீடா? இல்ல வெளிநாட்டில் முதலீடா?” என்ற அவரது கேள்வி, திமுகவின் மீதுள்ள குடும்ப அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நேரடியாக சுட்டிக்காட்டுகிறது.
அரசியல் என்பது வார்த்தை போர். அந்தப் போரை விஜய் இப்போது தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த விஜய், திமுகவின் விமர்சனங்களுக்கு பிறகு, நேரடியாக களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளார். இது இரு தரப்பிலும் ஒரு தீவிரமான வார்த்தைப்போருக்கு வழி வகுத்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தரப்பிலிருந்து அவர் எதிர்கொள்ளும் தடைகள், கட்டுப்பாடுகள், மின்வெட்டு போன்றவற்றை விஜய் வெளிப்படையாக பேசுகிறார். இது, மக்களுக்கு அவர் நேர்மையான முறையில் களத்தில் போராடுகிறார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, மக்கள் ஆதரவை பெருக்குகிறது.
திமுகவின் முப்பெரும் விழா போன்ற நிகழ்ச்சிகளில் வயதானவர்கள் அதிகளவில் காணப்பட்ட நிலையில், விஜய்யின் கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அதிக அளவில் திரள்வது திமுகவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டுவதிலிருந்து மாறுபட்டு, விஜய்க்குப் பணம் கொடுக்காமலேயே மக்கள் திரள்கிறார்கள். இது, திமுகவின் தொண்டர்கள் கூட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும், விஜய் பக்கம் மக்களின் தன்னார்வ ஆதரவு உள்ளது என்பதையும் காட்டுகிறது.
திராவிடக் கட்சிகள் மீதுள்ள ஊழல், வாரிசு அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவர்களது நீண்டகால ஆட்சி ஆகியவற்றின் மீதான அதிருப்தி, விஜய்க்கு சாதகமான அலையாக மாறியுள்ளது. இது, பாரம்பரிய அரசியல் கட்சிகளை தாண்டி, ஒரு புதிய மாற்றத்திற்கான அடையாளமாக உருவாகியுள்ளது.
விஜய்யின் கட்சிக்கு கொள்கை இல்லை என்றும், தொண்டர்களுக்கு ஒழுக்கம் இல்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், அரசியல் என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல, களத்தில் இறங்கி செயல்படுவதும்தான் என்று விஜய் நிரூபிக்கிறார். அவரது ஒவ்வொரு பிரசாரமும், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்த்துகிறது.
இந்த அரசியல் பாக்ஸிங்கில் யார் “நாக்-அவுட்” ஆவார்கள் என்பது எதிர்கால தேர்தல்களில் தெரியவரும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
