ஒரே நேரத்தில் இரண்டு அட்டாக்.. புத்தக விழாவில் விஜய் பேசிய அரசியல்..

  நேற்று நடந்த எல்லாருக்குமான அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து பேசியது…

7

 

நேற்று நடந்த எல்லாருக்குமான அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து பேசியது அரசியல் பார்வையாளர்கள் இடத்தில் பெரும் ஆச்சரியத்தையும் எழுப்பியுள்ளது.

“மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் ஒரு அரசு மத்தியில் இருக்கிறது,” என்று விஜய் கூறினார். மேலும், “தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறது. வேங்கை வயலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அது சம்பந்தமாக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை,” என்று அவர் தெரிவித்தது தான் ஹைலைட் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், ஒரு கட்சியின் தலைவர் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்க்கிறார் என்றால் அதற்கு ஒன்று அசாத்திய தைரியம் வேண்டும் அல்லது மிகப் பெரிய பின்னணி வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.

“மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளமாக பேசுகிறது. இவர்களுக்கு மக்களோடு நான் இணைந்து விடுவேன் என்ற எச்சரிக்கை,” என்று விஜய் கூறியதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொந்தளித்துள்ளன.

அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் இருந்தாலும், “அவருடைய மனசு முழுக்க முழுக்க நம்மோடு தான் இருக்கிறது,” என்று திருமாவளவன் குறித்து விஜய் கூறியதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், திமுக கூட்டணியில் குழப்பத்தை விஜய் ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் முடிவு என்ன என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.