நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், முதல் முறையாக போட்டியிடும்போதே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தீவிர நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவரது முயற்சி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில், ஒருவேளை தோல்வியடைந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்வது என்ற திட்டத்தையும் விஜய் வைத்துள்ளதாகவும், அரசியலில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் பரவி வரும் ஒரு வதந்தியில், தோல்வியடைந்தாலும் விஜய் கிட்டத்தட்ட ஒரு தனி அரசாங்கமே நடத்துவார் என்றும், தனக்கு வரும் சினிமா வருமானத்தின் மூலம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வார் என்றும், அதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இப்படி ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது.
விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் 250 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அரசியலில் ஒருவேளை தோல்வியடைந்தால் வருடத்திற்கு நான்கு படம் நடிக்க இருப்பதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் மூலம் அவருக்கு 1000 கோடி ரூபாய் வருமானம் வரும் என்றும், அதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5000 கோடி வருமானத்தை அப்படியே முழுவதுமாக மக்களுக்கு செலவு செய்ய போவதாகவும், மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அவர் பல்வேறு திட்டங்களை ஒரு தனி அரசாங்கம் போல் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது எந்த அளவுக்கு சாத்தியம்? ஒரு அரசாங்கத்தை மீறி தனிநபர் அல்லது ஒரு அரசியல் கட்சி இவ்வளவு பணம் செலவு செய்ய முடியுமா? அதற்கு சட்டம் இடம்கொடுக்குமா? அல்லது அரசு இதற்கு உரிய அனுமதி வழங்குமா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விகளாக உள்ளன.
இப்போதைக்கு இது வதந்தியாக இருந்தாலும், சில வெளிநாடுகளில் எதிர்க்கட்சிகள் நிழல் அரசாங்கம் போல் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. ஆளுங்கட்சியில் ஒரு அமைச்சர் இருந்தால், எதிர்க்கட்சியின் சார்பில் அவர்களாகவே ஒரு அமைச்சரை நியமனம் செய்து, அந்த துறைக்குத் தேவையான நலத்திட்டங்களை அந்த கட்சியின் சொந்த பணத்தில் இருந்து வழங்குவார்கள். அதுபோல விஜய் ஒருவேளை எதிர்க்கட்சியாக வந்தால், ஒரு நிழல் அமைச்சரவையை ஏற்படுத்தி, அதன் மூலம் மக்களுக்கு தனது சொந்த பணத்தைச் செலவு செய்வாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
