தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பிரதான கட்சியும் விஜய்யை வைத்து ஒரு கணக்கு போட்டு நகர்கிறது. குறிப்பாக, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளும், அதற்கு பதிலடியாக தி.மு.க.வின் தலைமை மேற்கொள்ளும் ரகசிய வியூகங்களும் தற்போதைய பேசுபொருளாக உள்ளன.
தி.மு.க.வுடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல சிக்கல்களை எதிர்கொள்வதால், அவர்கள் விஜய்யின் த.வெ.க.வை ஒரு மாற்றுச் சக்தியாக பார்க்கின்றனர். 1967-க்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாத தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, தமிழகத்தில் தங்கள் பலத்தை மீண்டும் நிரூபிக்க, த.வெ.க.வுடன் கைகோர்ப்பது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும் என்று டெல்லி மேலிடம் கருதுவதாக தகவல்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பல தலைவர்கள், தி.மு.க.விடம் அதிக தொகுதிகளைக் கோரி குடைச்சல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஜோடங்கர், “நாங்கள் சரி பாதி தொகுதிகளில் வலுவாக இருக்கிறோம்” என்று கூறி தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த அதிக தொகுதி கோரிக்கைக்கு பின்னணியில், விஜய்யை ஒரு மாற்று அணியாக கருதும் எண்ணமும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்கள் மூலம் விஜய்யின் வியூக வகுப்பாளர்கள் மற்றும் த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் பலமுறை சந்திப்புகள் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் உள்ள திரை செல்வாக்கு, தென் இந்தியாவில் தங்கள் பலத்தை மொத்தமாகப் பெருக்கிக்கொள்ள உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து ஒருவேளை வெளியேறினால், அதைச் சமாளிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் தி.மு.க. தலைமையிடம் தயாராக உள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையை கவனிக்காமல் இல்லை.
ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினால், அவர்களுக்கு ஒதுக்கப்படவிருந்த 35 முதல் 40 தொகுதிகளை, ம.தி.மு.க., வி.சி.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போன்ற கூட்டணி நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்து, அவர்களின் பலத்தை அதிகரிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸுக்கு மாற்றாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை தி.மு.க. தீவிரமாக பரிசீலிப்பதாகத் தெரிகிறது. கமலின் தேசிய அளவிலான அறிமுகம் மற்றும் அவரது பேச்சுக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், அவர் இழந்த காங்கிரஸ் வாக்குகளை ஈடுகட்டுவார் என்றும் தி.மு.க. தலைமை நம்புகிறது. கமல் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி. ஆக்கப்பட்டதும் இதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் புதிய கட்சி இளைஞர்களின் வாக்குகளை பிரிப்பதை தடுக்க, தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் களமிறக்கப்பட்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடத்திய தி.மு.க. 75 அறிவுத் திருவிழாவில், “தாஜ்மஹால், ஈபிள் டவர் போல அட்டை பெட்டிகளை வைத்து கண்காட்சி நடத்தினால் மக்கள் பார்ப்பார்கள். ஆனால், தொட்டால் கீழே விழுந்துவிடும். அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது” என்று மறைமுகமாக விஜய்யை விமர்சித்தார். “எங்கள் கூட்டம் கொள்கைக்காக கூடியவர்கள்; விசிலடிக்கிற கூட்டம் கிடையாது” என்றும் அவர் பதிவிட்டார்.
வள்ளுவர் கோட்டத்தில் இளைஞரணிக்கு இரண்டு நாட்கள் நீண்ட பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தி.மு.க. தொண்டர்களை கொள்கை ரீதியாக கல்வி புகட்டி, பூத் லெவலில் பணியாற்ற தயார் செய்கிறது தி.மு.க. இந்த செயல்பாடுகள், இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய்யின் பக்கம் செல்லாமல் தடுக்கும் ‘நம்பர் கேம்’ என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் விஜய்யை தங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க முயன்று வருகின்றன. விஜய்யை காங்கிரஸ் பக்கம் செல்லாமல் தடுத்தால், அது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு நல்லது என்றும் அவர்கள் கணக்கு போடுகின்றனர்.
த.வெ.க. இன்னும் எந்த கூட்டணியையும் உறுதி செய்யவில்லை. சிறப்பு பொதுக்குழுவில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்றும், கூட்டணி முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நொடிக்கு நொடி மாறிவரும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில், பீகார் தேர்தல் முடிவு மற்றும் அடுத்து வரும் சில மாதங்களே தமிழக கூட்டணியை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
