தமிழக முதலமைச்சராக பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே, எவ்வித ஓய்வுமின்றி நேரடியாக தலைமை செயலகத்திற்கு விரைந்து தனது பணிகளை தொடங்கியுள்ளார் முதல்வர் விஜய். நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த பிரம்மாண்ட விழாவிற்கு பிறகு, வழக்கமான கொண்டாட்டங்களில் நேரத்தை செலவிடாமல் கோட்டைக்கு அவர் சென்ற விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், ஒரு மாநிலத்தின் நிர்வாகம் ஒரு நொடி கூட முடங்க கூடாது என்ற எண்ணத்தில் அவர் கோட்டைக்கு சென்றது, “இனி விடுமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது, மக்கள் பணி மட்டுமே பிரதானம்” என்ற தெளிவான செய்தியை தமிழகத்திற்கு சொல்லியுள்ளது.
தலைமை செயலகத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு, தலைமை செயலாளர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் என அனைவரும் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், மிகவும் கம்பீரமாக தனது அறைக்குள் நுழைந்து கோப்புகளில் கையெழுத்திட தொடங்கினார். திரையில் அவர் ஹீரோவாக வரும்போது இருந்த அதே வேகம் மற்றும் நேர்த்தி இன்று அதிகாரத்திலும் வெளிப்பட்டது. கோட்டை வட்டாரங்களில் வழக்கமாக இருக்கும் மந்தமான சூழல் மாறி, முதல்வர் விஜய்யின் வருகையால் ஒரு புதிய சுறுசுறுப்பும் உற்சாகமும் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரத்திலும் பரவியுள்ளது.
இதுவரை விஜய்யை திரையில் மட்டுமே ஆக்ரோஷமான ஹீரோவாகவும், அநீதிகளை தட்டிக்கேட்கும் நாயகனாகவும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்று முதல் அரசியலிலும் அவர் ஒரு நிஜ வாழ்க்கை நாயகனாகத் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். சினிமாவில் அவர் ஒரு பிரச்சனையை தீர்க்க காட்டிய அதே துணிச்சல், இப்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் அரசாணைகளாக உருமாறி வருகின்றன. “நிழலில் பார்த்தது போதும், இனி நிஜத்தில் பாருங்கள்” என்று சொல்லும் வகையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு திறமையான நிர்வாகிக்கான அடையாளமாக அமைந்துள்ளது.
நிர்வாக ரீதியாக தனது பிடியை வலுவாக்க தொடங்கியுள்ள அவர், ஒவ்வொரு துறையிலும் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளார். ஊழல் தடுப்பு, பொது விநியோக திட்டம் மற்றும் இளைஞர் நலன் சார்ந்த துறைகளில் இருந்து வரப்போகும் ஒவ்வொரு உத்தரவும் ‘இடி’ போல அநீதி இழைப்பவர்களை தாக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது. மக்களின் குறைகளை தீர்க்கும் வேகத்தில் எவ்வித சமரசமும் செய்யப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். முதல் நாளிலேயே அவர் காட்டிய இந்த வேகம், இனி தமிழக ஆட்சி நிர்வாகம் என்பது ‘வேற லெவலில்’ இருக்கப்போவதை உறுதி செய்துவிட்டது.
இறுதியாக, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தலைமைச் செயலகத்தில் அமர்ந்து கோப்புகளை அவர் கையாண்ட விதம், ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. வார இறுதி விடுமுறை என்ற பாகுபாடின்றி மக்கள் பணியாற்றும் இந்த மனநிலை, அரசு ஊழியர்களிடமும் ஒரு பொறுப்புணர்வை உருவாக்கியுள்ளது. “சொன்னதை செய்வோம்” என்பதை கடந்து, “சொல்லாததையும் செய்வோம்” என்ற வேகத்தில் முதல்வர் விஜய் எடுத்து வைக்கும் இந்த ஒவ்வொரு அடியும் தமிழகத்தின் எதிர்காலத்தை செதுக்கப்போகும் உளி என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
