தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்பது வெறும் ஒரு புதிய கட்சியின் வரவாக மட்டும் பார்க்கப்படாமல், பல தசாப்தங்களாக நிலைபெற்றுள்ள அரசியல் சமன்பாடுகளை தலைகீழாக மாற்றும் ஒரு ‘விஜய் ஃபேக்டராக’ உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் நேரடியாக களம் இறங்கும்போது, அதுவரை மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்காக போராடி வந்த கட்சிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
குறிப்பாக, விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தள்ளாட்டத்தில் இருக்கும் தேமுதிக மற்றும் வைகோ தலைமையிலான மதிமுக போன்ற கட்சிகள், விஜய்யின் வருகையால் இளைஞர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்து, அரசியல் வரைபடத்திலிருந்தே காணாமல் போகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துவமான அரசியல் பாதையில் பயணித்து வரும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு, விஜய் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளார். ‘மாற்று அரசியல்’ மற்றும் ‘தமிழ் தேசிய’ வாக்குகளை ஈர்த்து வந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் விஜய் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துவார் என்றும், இதனால் அக்கட்சியைத் தேட வேண்டிய நிலை உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது.
திரையுலகில் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், சீமானின் மேடை பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் பட்சத்தில், அது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை முடக்கும் ஒரு காரணியாக அமையும்.
மற்றொருபுறம், தென் மாவட்டங்களில் செல்வாக்கை கொண்டுள்ள அமமுக போன்ற கட்சிகள், விஜய்யின் எழுச்சியால் ஏற்படும் வாக்குச்சிதறலை தாக்கு பிடிக்க முடியாமல், மீண்டும் அதிமுகவுடன் இணைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம். பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவின் வாக்குகள் சிதறுவது விஜய்க்கு சாதகமாக அமையும் என்பதால், திராவிட வாக்குகளை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கைகோர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற சூழல் உருவாகலாம். இந்த அரசியல் ஒருங்கிணைப்பு என்பது விஜய்யின் வருகையால் ஏற்படும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.
ஜாதி மற்றும் சமூக ரீதியிலான வாக்கு வங்கிகளை தங்களின் பலமாக கொண்டுள்ள பாமக மற்றும் விசிக போன்ற கட்சிகளும்கூட, விஜய்யின் வருகையால் தங்கள் இருப்பை தக்கவைக்க போராட வேண்டியிருக்கும். வன்னியர் மற்றும் தலித் சமூக இளைஞர்களிடையே விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, அந்தக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் ஊடுருவக்கூடும்.
இதனால், இக்கட்சிகள் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முன்பை விட அதிகப்படியான போராட்டங்களை சந்திக்க நேரிடும். தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இந்த கட்சிகளின் பேரம் பேசும் சக்தி விஜய்யால் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது தமிழக அரசியலில் ஒரு ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பல ஆண்டுகளாக பெயரளவில் மட்டும் இயங்கி வரும் சிறிய கட்சிகளை ஒழித்துக்கட்டிவிட்டு, பலமான சில சக்திகள் மட்டுமே களத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சூழலை விஜய் ஃபேக்டர் உருவாக்கும்.
இது தமிழக அரசை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் ஒரு சக்தியாக இருக்கும். கொள்கைகளை விட கவர்ச்சிகரமான பிம்பம் மற்றும் இளைஞர்களின் ஆதரவு ஆகியவை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் போது, பழைய அரசியல் சூத்திரங்கள் அனைத்தும் தோல்வியடைந்து, ஒரு புதிய அரசியல் சகாப்தம் பிறப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
