தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்தை முன்னிறுத்தி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா மேடையானது அதிகாரப்பூர்வமான அரசு மரபுகளையும், கட்சியின் விசுவாசத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர், முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மேடையின் மையப்பகுதியில் மிக முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் முன்னிலையில் விஜய் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் அந்த தருணத்தை நேரில் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் திரண்டுள்ளனர்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கும் நபர்களின் பட்டியல் கட்சியின் எதிர்கால திட்டத்தையும், விசுவாசத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் நீண்டகால அரசியல் பயணத்தில் நிழலாக தொடர்ந்தவர் என்பதால் அவருக்கு மேடையில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுகவிலிருந்து விலகி விஜய்யுடன் கைகோர்த்த செங்கோட்டையன் மற்றும் கட்சியின் ஐடி பிரிவு மற்றும் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்காற்றி வரும் நிர்மல் குமார் ஆகியோரும் மேடையை அலங்கரித்துள்ளனர். விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மூளையாக கருதப்படும் இவர்கள் அனைவரும் இன்று ஒரு புதிய அமைச்சரவையின் தொடக்கப் புள்ளியாகக் காட்சியளிக்கின்றனர்.
அரசியல் ஆளுமைகளுக்கு மத்தியில், சாதாரண தொண்டர்களுக்கும் மேடையில் இடம் அளிக்கப்பட்டிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் செல்வி கீர்த்தனா மற்றும் டாக்டர் பிரபு ஆகியோருக்கு மேடையில் முக்கிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை சாமானியர்களாக தங்கள் பணிகளை செய்து வந்த இவர்கள், இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்கும் மேடையில் அமர்ந்திருப்பார்கள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். கட்சி தொண்டர்களைக் கௌரவிக்கும் விதமாக விஜய் எடுத்த இந்த முடிவு, ‘மக்களுக்கான ஆட்சி’ என்ற அவரது தாரக மந்திரத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
இவர்களுடன் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலமான ராஜ்மோகன் உள்ளிட்டோரும் மேடையில் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இவர்களின் பங்கு முக்கியமானது என்பதால், இந்த வரலாற்று தருணத்தில் அவர்களையும் மேடையில் ஏற்றி விஜய் அழகு பார்த்துள்ளார். மேடையில் இருக்கும் ஒவ்வொரு நபரும் விஜய்யின் இந்த வெற்றி பயணத்தில் ஒரு காலகட்டத்தில் உறுதுணையாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் முதல் அடித்தட்டுத் தொண்டர்கள் வரை மேடையில் பிரதிபலிக்கப்படுவது ஒரு ஜனநாயக பூர்வமான சூழலை உருவாக்கியுள்ளது.
இறுதியாக, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மிகுந்த ‘கெத்துடன்’ விஜய் மேடைக்கு வந்து தனது பதவிப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்கிறார். அப்போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் எழுப்பிய முழக்கம், தமிழக அரசியலில் ஒரு புதிய விடியல் பிறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. டெல்லியில் இருந்து வந்த தலைவர்கள் முதல் உள்ளூர் நிர்வாகிகள் வரை அனைவரும் பார்த்திருக்க, தமிழகத்தின் நிர்வாக பொறுப்பை விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் தனது கைகளில் எடுத்துக்கொண்டார். இந்த விழாவின் ஒவ்வொரு அசைவும், மேடையில் அமர்ந்திருந்த ஒவ்வொரு முகமும் தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால அரசியலை தீர்மானிக்கப்போகும் சக்திகளாக உருவெடுத்துள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
