நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்து, மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஒரு விரிவான விவாதத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, மதுரையில் நடைபெற்ற தவெக மாநாடு, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவை இலக்கு வைக்கும் விஜய்
முன்பு மறைமுகமாக பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வந்த விஜய், தனது பேச்சில் வெளிப்படையாக அதிமுகவின் வாக்கு வங்கியை இலக்கு வைத்திருப்பது ஒரு புதிய மாற்றம் என்று லட்சுமணன் தெரிவித்தார். அதிமுக தலைமை “தகுதியற்றது” என்ற விஜய்யின் விமர்சனம், அதிருப்தியில் உள்ள அதிமுக உறுப்பினர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017-இல் பாஜக அதிமுக வாக்கு வங்கியை பெற முயன்றது. ஆனால், அது தோல்வியடைந்தது. தற்போது, அதிமுகவில் ஒரு வலிமையான தலைவர் இல்லாததும், பாஜகவுக்கு அடிபணிந்தது போன்ற பிம்பமும் அதன் பலவீனமாக உள்ள நிலையில், விஜய்யின் இந்த தந்திரம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலக்க வாக்கு சதவீதம் சாத்தியம்
லட்சுமணன் கணிப்பின்படி, தவெக தனது முதல் தேர்தலில் குறைந்தது 10% இரட்டை இலக்க வாக்குகளை பெறும். இது, அவரது கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க போதுமானது. வயதான அதிமுக வாக்காளர்கள் தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொள்ளத் தயங்கினாலும், விஜய் இளைஞர்கள் மற்றும் பெண்களை கணிசமாக ஈர்க்க முடியும் என்றும், இவர்கள் தங்கள் குடும்பங்களின் வாக்குகளைப்பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற கட்சிகளுக்கான விமர்சனமும், எச்சரிக்கையும்
ஒரு அரசியல் தலைவர் பொது நிகழ்வுகளில் ஒரு நடிகரை போல செயல்படக்கூடாது என்று விமர்சித்த லட்சுமணன், விஜய்யின் “பார்வையாளர்கள் மத்தியில் நடைபயணம்” மற்றும் எளிமையான தோற்றத்தை ஒரு தீவிர அரசியல்வாதிக்கு பொருத்தமற்றது என்றும் சுட்டி காட்டினார். மேலும், திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் எழுச்சியைச் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் ஆதரவாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஏன் அவரை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தவெக போன்ற புதிய அரசியல் சக்திகளை அலட்சியம் செய்யாமல், அனைத்து கட்சிகளும் தங்களை தாங்களே பலப்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
