நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதன் முதல் மாநில மாநாட்டை மிகப்பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ள நிலையில், அவர் கையில் எடுத்துள்ள அரசியல் தளம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
பொதுவாக ஒரு முன்னணி நடிகர் கட்சி ஆரம்பிக்கும்போது மாநாடு முழுக்க தன் உருவம் தாங்கிய பேனர்களையும், கட்-அவுட்களையும் வைத்து ரசிகர்களை குஷிப்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். விஜயகாந்த், கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தபோது இதை தான் செய்தார்கள். ஆனால் விஜய் தனது மாநாட்டு மேடையில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரின் திருவுருவ படங்களை வைத்து, தனது கட்சி எத்தகைய சித்தாந்த பின்னணியைக் கொண்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இது வெறும் திரைப்பலத்தை மட்டும் நம்பி அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதையும், அரசியலை ஆழமாக புரிந்துகொண்டு ஒரு தெளிவான பாதையை வகுத்திருப்பதையும் காட்டுகிறது.
விஜய் தனது கொள்கை தலைவர்களாக தேர்ந்தெடுத்திருக்கும் நபர்கள் இந்திய மற்றும் தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமைகள். கல்விக்கண் திறந்த காமராஜர், பகுத்தறிவுப் பகலவன் பெரியார், இந்திய அரசியலமைப்பை செதுக்கியதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் விளங்கிய அம்பேத்கர் ஆகியோரை வரிசைப்படுத்தியதன் மூலம் சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவற்றைத் தனது இலக்காக அவர் முன்வைக்கிறார். குறிப்பாக, தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தியடிகளால் புகழப்பட்ட அஞ்சலையம்மாள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகிய இரு பெண் ஆளுமைகளை முன்னிறுத்தியிருப்பது, பெண்ணியத்திற்கும் வீரத்திற்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இந்த தலைவர்களின் படங்களை வைப்பதன் மூலம் தனது ரசிகர்களை தாண்டி, சாதி மதம் கடந்த ஒரு பொதுவான அரசியல் அங்கீகாரத்தை அவர் தேடுகிறார் என்பது தெரிகிறது.
அதே நேரத்தில், தமிழக அரசியலில் ஏற்கனவே தங்களை சித்தாந்தவாதிகளாக காட்டிக்கொள்ளும் மற்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது விஜய்யின் இந்த நகர்வு கவனிக்கத்தக்கதாக உள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் மேடைகளில் பேசும் முறையும், மாற்று கருத்துடையவர்களைக் கையாளும் விதமும் அண்மைக்காலமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. சித்தாந்தம் பேசுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பெண்களை கேவலமாக நடத்துவதோ அல்லது கட்சியில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் ஒருவித அதிகாரப் போக்கை வெளிப்படுத்துவதோ ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும், தனிநபர் விமர்சனங்களில் இறங்குவதையும் விட, கொள்கை ரீதியான முதிர்ச்சியும் தார்மீகப் பொறுப்பும் ஒரு தலைவருக்கு மிக அவசியம் என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, தற்போது ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்திருப்பதன் பின்னணியில் மிக நீண்ட கால திட்டமிடல் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவர் புஸ்ஸி ஆனந்த் போன்ற நிர்வாகிகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது வரை ஒரு நேர்த்தியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். ரசிகர்களை அரசியல்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு தெரிந்திருக்கிறது என்பதை அவர் வைத்துள்ள அந்த சித்தாந்த தலைவர்களின் பேனர்களே உறுதிப்படுத்துகின்றன. நடிகராக இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மீது வைக்கப்படும் வழக்கமான விமர்சனங்களை தகர்க்கும் வகையில், வரலாற்றின் முக்கிய தியாகிகளையும் புரட்சியாளர்களையும் தனது வழிகாட்டிகளாக அவர் களம் இறக்கியுள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கும் வேளையில், விஜய்யின் இந்த வருகை மற்ற கட்சிகளுக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. வெறும் சினிமா கவர்ச்சியை மட்டும் முதலீடாக கொள்ளாமல், திராவிட மற்றும் தேசிய நீரோட்டத்தின் சிறந்த விழுமியங்களை தேர்ந்தெடுத்து ஒரு கலவையான அரசியலை அவர் முன்வைக்கிறார். மற்ற அரசியல் தலைவர்கள் விமர்சனங்களில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் தனது அமைதி மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளார். வரும் காலங்களில் இந்த சித்தாந்த தலைவர்களின் கனவுகளை அவர் எவ்விதம் நடைமுறைப்படுத்த போகிறார் என்பதை பொறுத்தே அவரது அரசியல் வெற்றி தீர்மானிக்கப்படும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
