தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கும் வியூகம் நிறைந்த நகர்வுகளுக்கும் பஞ்சமில்லாதது. அண்மை காலமாக, திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் கூட்டணியில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து ஒரு ‘மெகா கூட்டணி’ அமைக்கலாம் என்ற பேச்சு அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளது.
அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸை நிராகரிக்கும் ஒரு புதிய சக்தி மையத்தை உருவாக்கும் நோக்கில் இந்த வியூகம் தீட்டப்படுகிறதா, அல்லது இதுவும் மக்கள் நல கூட்டணி போல் ‘புஸ்வானம்’ ஆகிவிடுமா என்ற விவாதம் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடந்துகொண்டிருக்கிறது.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஊடக விவாதங்கள், ஆவேச பேச்சுகள் மற்றும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் இவர் ஈர்த்துள்ள இளைஞர் சக்தி மற்றும் நடுநிலை வாக்காளர்களின் கவனமும் குறிப்பிட தகுந்தது.
அண்ணாமலை, பாஜக தலைமையின் சில முடிவுகளுக்கு முரணாக செயல்படுவதாகவும், அவர் மீண்டும் மாநில தலைவராக நியமிக்கப்பட மாட்டார் என்றும், தேசிய அளவில் அவருக்கு முக்கியத்துவம் குறைவாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தனது தனிப்பட்ட செல்வாக்கை கொண்டு, பாஜக-விலிருந்து வெளியேறி, தனிக் கட்சி ஆரம்பிக்கும் முடிவை அண்ணாமலை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அப்படி ஒரு நகர்வு, பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு பின்னடைவாக அமையலாம்.
ஒருவேளை அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில், உடனடியாக அவர் த.வெ.க தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி, திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை பிளவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் – அண்ணாமலை கூட்டணி உருவானால், அது ஒரு புதிய அரசியல் பாதையை திறக்கும். இந்த கூட்டணியின் பலத்தை அதிகரிக்க, மேலும் பல முக்கியத் தலைவர்கள் அல்லது கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுகிறது. முதலாவதாக டிடிவி தினகரன் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி வைத்திருக்கும் டிடிவி தினகரன், இந்த கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது போல் தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம் : அதிமுக-வின் தலைமையுடன் முரண்பட்டுள்ள ஓபிஎஸ், தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்த இந்த கூட்டணியில் இணையலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதரவும், அமைதியான அரசியல் அணுகுமுறையும் கொண்ட இவர், கூட்டணிக்கு பலம் சேர்க்கலாம்.
அதேபோல் அதிமுக-வில் உள்ள அதிருப்தி தலைவர்கள் அல்லது செல்வாக்குமிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர், விஜய்யின் புதிய அரசியல் பயணத்தில் நம்பிக்கை வைத்து இணையலாம். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
வன்னியர் சமுதாயத்தில் பலமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமக, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்க தயக்கம் காட்டுகிறது. ஒரு நிலையான ஆட்சியை நோக்கி செல்லும் புதிய கூட்டணியில் பாமக இணைந்தால், இந்த கூட்டணிக்கு ஒரு உறுதியான சமூக பலம் கிடைக்கும்.
விஜயகாந்தின் தேமுதிக, ஒரு காலத்தில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக விளங்கியது. தற்போது தளர்ந்து காணப்பட்டாலும், இந்த கூட்டணிக்கு ஒரு ‘மாற்று சக்தி’ தோற்றத்தை அளிக்க தேமுதிக பயன்படலாம்.
இந்த கூட்டணிக் கலவையானது, விஜய்யின் இளைஞர் சக்தி, அண்ணாமலையின் களப் போராட்ட குணம், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்களின் அரசியல் அனுபவம் மற்றும் பாமக, தேமுதிகவின் வாக்கு வங்கிகள் ஆகியவற்றின் கலவையாக அமையும் பட்சத்தில், அது திராவிடக் கட்சிகளுக்கு ஒரு கடுமையான சவாலை முன்வைக்கும்.
தமிழகத்தில் பல மாற்று அணிகள் உருவாகி, இறுதியில் தோல்வியை தழுவிய வரலாறு உண்டு. 2016 சட்டமன்ற தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி ஒரு மாற்று சக்தியாக களமிறங்கியது. ஆனால், அது புஸ்வானம் போல் சத்தமில்லாமல் தோல்வியை தழுவியது.
ஆனால் வயதில் இளையவர்களான விஜய் – அண்ணாமலை கூட்டணி ஒருவேளை உருவானால், அது தமிழக அரசியலில் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும். குறிப்பாக, இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் திராவிட கட்சிகளில் அதிருப்தி கொண்ட நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் இந்த கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற முன்மொழிவை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, இந்த கூட்டணி வெறும் பேச்சாக இருக்குமா அல்லது தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்பதை வரும் நாட்களில் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
