வாரிசுகள் அழிந்த அரசியல் சாம்ராஜ்யங்கள்.. ஒருஅரசியல் கட்சி தலைவரின் வாரிசு அரசியலுக்கு வருகிறார் என்றால் அந்த கட்சி அழிய போகிறது என்று அர்த்தம்.. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் ஆகியவை இதற்கு உதாரணங்கள்.. அரசியல் என்பது பிசினஸ் அல்ல, எனக்கு அப்புறம் என் கம்பெனியை என் மகன் நடத்துவதற்கு.. இது மக்களாட்சி, மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும்…

இந்திய அரசியலின் போக்கை நீண்டகாலமாக தீர்மானித்து வந்த வாரிசு மற்றும் குடும்ப அரசியல் கட்சிகள் இன்று தங்கள் வரலாற்றிலேயே மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 1990-களில் ஜாதி, பிராந்திய அடையாளம் மற்றும் தனிநபர்…

varisu

இந்திய அரசியலின் போக்கை நீண்டகாலமாக தீர்மானித்து வந்த வாரிசு மற்றும் குடும்ப அரசியல் கட்சிகள் இன்று தங்கள் வரலாற்றிலேயே மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 1990-களில் ஜாதி, பிராந்திய அடையாளம் மற்றும் தனிநபர் செல்வாக்கு என்ற அடித்தளத்தில் உருவான பல பிராந்திய கட்சிகள், தற்போதைய அரசியல் சூழலில் தங்களின் இருப்பை தக்கவைக்கவே பெரும் போராட்டம் செய்ய வேண்டியுள்ளது. தேசிய அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் அசுர வளர்ச்சியும், பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் தேய்மானமும், இந்திய அரசியலை மீண்டும் ஒரு புதிய இரு துருவ களத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இந்த மாற்றம் குடும்ப அதிகாரத்தை நம்பி இருந்த பல தலைவர்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்றது முதலே வாரிசு அரசியலை ‘கறையான்’ என வர்ணித்து, அதனை தீவிரமாக விமர்சித்து வருகிறார். அவரது இந்த தொடர் அரசியல் பிரசாரம் மக்களிடையே வாரிசு அரசியல் குறித்த தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மாநிலங்களில் தங்களை அசைக்க முடியாத சக்திகளாக கருதிய பல குடும்ப கட்சிகள், தற்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க.வுடன் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒரு அங்கமாக தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. இது இந்திய அரசியலின் அடிவேர் முதல் ஒரு பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வீழ்ச்சியின் தாக்கம் எதிரொலிப்பதை காண முடிகிறது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவை சுற்றியே முடங்கி கிடப்பதும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஊழல் வழக்குகளாலும் பலவீனத்தாலும் செல்வாக்கை இழப்பதும் இதற்கு சான்றாகும். ஒடிஷாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பிஜு ஜனதா தளம் 2024 தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததும், கர்நாடகாவில் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது தனித்துவத்தை இழந்து பா.ஜ.க. கூட்டணியில் தஞ்சம் புகுந்ததும், பிராந்திய கட்சிகளின் செல்வாக்கு சரிவை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துள்ள திருப்பம் இந்திய அரசியலையே உற்றுநோக்க செய்துள்ளது. திராவிட அரசியலின் கோட்டையாக கருதப்பட்ட தமிழகத்தில், நடிகர் விஜய் களமிறங்கிய முதல் தேர்தலிலேயே ‘தமிழக வெற்றிக் கழகம்’ 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது ஒரு வரலாற்று நிகழ்வாகும். நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து, அக்கட்சியின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியிலேயே தோல்வியை சந்தித்தது, தமிழக அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததை உறுதிப்படுத்துகிறது. புதிய மாற்றத்தை எதிர்பார்த்த இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு பெரும் பலமாக அமைந்தது.

பா.ஜ.க.விலும் குடும்ப பின்னணி கொண்ட தலைவர்கள் இருந்தாலும், அங்கு அதிகார மையங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பதே தற்போதைய அரசியல் யதார்த்தமாகும். 1990-களில் ஜாதி மற்றும் சமூக சமன்பாடுகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட, இன்றைய வாக்காளர்கள் வளர்ச்சி, உட்கட்டமைப்பு வசதிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால், குடும்ப தலைமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகள் தங்களின் கவர்ச்சியை இழந்து வருகின்றன.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், வாரிசு அரசியல் இந்திய அரசியலில் இருந்து முற்றிலும் மறைந்துவிடவில்லை என்றாலும், அதன் ஆதிக்கம் முன்பை விட பெருமளவு குறைந்துவிட்டது. தங்களை காலத்திற்கு ஏற்ப மறுசீரமைத்து கொள்ளாத, ஜனநாயக முறைக்கு மதிப்பளிக்காத பிராந்திய மற்றும் குடும்ப அரசியல் கட்சிகள், விரைவிலேயே வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைந்து போகும் அபாயத்தில் உள்ளன. இத்தகைய சூழலில், மக்களின் தேவைகளை சரியாக புரிந்து கொண்டு செயலாற்றும் சக்திகள் மட்டுமே எதிர்கால அரசியலில் நிலைத்து நின்று ஆதிக்கம் செலுத்தும் என்பது உறுதி.