தற்போது ஓரிடத்தில் சென்று வேலை பார்ப்பதைக் காட்டிலும் சுய தொழில் செய்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதையே இளைஞர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால் அதிக முதலீடு செய்து, சம்பளத்திற்கு பணியாட்களை அமர்த்தி அதன்பிறகு லாபம் எடுக்கும் பெரிய தொழில்களை பெரும்பாலும் விரும்புவதில்லை.
ஏனெனில் அதில் அதிக ரிஸ்க் இருப்பதால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களை நாடிச் செல்கின்றனர். அப்படி பொழுதுபோக்காகவும், பிரபலபடுத்துவதற்கும், நல்ல வருமானம் கொடுக்கக் கூடிய தொழில்களில் ஒன்றாக தற்போது இளைஞர்களிடம் டிரெண்டிங்கில் இருப்பது சமூக வலை தளப்பக்கங்கள்.
பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளம், வேர்டு பிரஸ், பிளாக்ஸ் எழுதுவது போன்றவற்றின் மூலம் தங்களுக்குள் இருக்கும் தனித் திறமைகளைக் வெளிப்படுத்தி அதன்மூலம் கை நிறைய சம்பாதிக்கின்றனர். இந்தத் தொழில்கள் மூலம் அவர்களுக்கு புகழ் வெளிச்சமும் கிடைக்கிறது. இப்படி பலர் Social Media Influencer களாக பணியாற்றி வரும் சூழலில் இவர்களுக்கென தனிச் சட்டத்தினை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு வகுத்துள்ளது.
இச்சட்டத்தின் படி சமூக வலைதளப்பக்கத்தில் அரசின் திட்டங்களையும், அரசின் சிறந்த செயல்பாடுகளையும் வீடியோவாகப் பதிவிட்டு வெளியிடுவோருக்கு தகுந்த ஊதியங்கள் வழங்க நிர்ணயித்துள்ளது. இந்த டிஜிட்டல் மீடியா கொள்கையின் படி மாதம் Social Media Influencer களுக்கு அவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடும் போது அதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் யூடியூப்பில் மட்டும் மாதம் ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் பெறலாம். ஆனால் அதேசமயத்தில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், விமர்சனங்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனைக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
ஏற்கனவே வீடியோக்களுக்கு வருமானத்தை சமூக வலை தள நிறுவனங்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது அரசே இது போன்ற வீடியோக்களுக்கு தனி சட்டம் வகுத்து சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதால் இனி Social Media Influencer-களின் காட்டில் அடைமழைதான்.